கூட்டமைப்பை தவிர தமிழ் மக்களிடம் வாக்கு கேட்கும் உரிமை வேறு யாருக்கும் இல்லை!

Report Print Kumar in தேர்தல்

வீட்டுக்கட்சியை தவிர தமிழ் மக்களிடம் வாக்கு கேட்கும் உரிமை வேறு எவருக்கும் இல்லையென மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

தமிழர்களை கடத்தி கொலைசெய்த, கப்பம்பெற்ற, காட்டிக்கொடுத்து விடுதலை போராட்டத்தினை இல்லாமல் செய்தவர்கள் இன்று தமிழர்களிடம் வாக்கு கேட்டுவருவதாகவும், அவர்களை மக்கள் நிராகரிக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேசபைக்கான தேர்தலில் போட்டியிடும் யோ.ரஜனி மற்றும் கயசீலன் ஆகியோரின் தேர்தல் செயற்பாட்டு அலுவலகம் பாலையடிவட்டை கூழாவடியில் நேற்று மாலை திறந்து வைக்கப்பட்டது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசுகையில்,

“உலகமே வியந்த விலைபோகாத போராட்டமாகவிருந்த, மிகவும் கட்டுப்பாட்டுடன் இருந்த விடுதலைப் போராட்டத்தினை பலவீனப்படுத்தியது யார்? இப்படிப்பட்டவர்கள் எப்படி வந்து உங்களிடம் வாக்குகளை கேட்கமுடியும்.

அநீயாயங்களை, அக்கிரமங்களை செய்தவர்கள், பெண்களின் தன்மானத்தோடு விளையாடியவர்கள், கொடுமைகளை செய்தவர்கள் கூட தமிழ் மக்களிடம் வாக்கு கேட்டுவருகின்றனர்.

இவ்வறான வரலாற்று தவறுகளை செய்தவர்களை மதிப்பதற்கு எந்த காரணமும் இருக்கமுடியாது. அவர்கள் வரும்போது அவர்களை வரவேற்காமல் அவர்களுக்கு வாக்களிக்காமல் நிராகரிக்கவேண்டும்.

முன்னைய பிரதேசசபை தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாத காரணத்தினால் வேறு சில போட்டியிட்டவர்கள் ஆட்சிசெய்தனர்.

எங்களது தலைவர்களை சுட்டுக்கொன்றும், கொலை அச்சுறுத்தல்களை கொடுத்தும் தேர்தலில் போட்டியிடமுடியாத வகையில் வீட்டுக்கட்சியினர் வீட்டுக்குள் முடக்கப்பட்டனர்.

இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டத்தில் வீட்டுக்கட்சியை தவிர வாக்கு கேட்பதற்கு வேறு யாருக்கும் உரிமை இல்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.