மாநகர சபையினூடாகக் கிடைக்கின்ற சலுகைகளை நம்பி நாம் தேர்தலில் குதிக்கவில்லை

Report Print Nesan Nesan in தேர்தல்

மாநகர சபையினூடாகக் கிடைக்கின்ற சொற்ப தொகைகைளையும், சலுகைகளையும் நம்பி நாம் தேர்தலில் குதிக்கவில்லை என கல்முனை மாநகர சபைத்தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியுள்ள ஏ.எம்.முசாதிக் தெரிவித்துள்ளார்.

மருதமுனை பிரதான வீதியில் தேர்தல் நடவடிக்கைக் காரியாலயத்தைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில், “எம்மிடம் உள்ள பொருளாதாரத்தைக் கொண்டு மக்களுக்கு சேவையாற்றவும், மாற்றத்தை ஏற்படுத்தவுமே தேர்தலில் குதித்துள்ளோம்.

கடந்த 15 வருடங்களாக ஒரே வாய்ப்பாட்டுடன் தொடராக அனுப்பிக் கொண்டிருந்த உறுப்பினர்களால் எமது மக்கள் அடைந்த நன்மைகளை நினைத்துப் பார்க்க வேண்டிய தருணம் வந்துள்ளது.

எமது பிரதேசத்தில் உள்ள மக்களின் தொழில் மற்றும் அன்றாடப் பிரச்சினைகள் பல தீர்க்கப்படாமல் இன்னும் இருக்கின்றன.

வேலைவாய்ப்புகள் வருகின்ற போது தன்னுடன் ஒட்டிக் கொண்டிருக்கின்றவர்களுக்குக் கொடுத்து விட்டு அப்பணியிலிருந்து விலகிக் கொள்கின்ற செயற்பாடுகளுக்கு நாம் முற்றுப்புள்ளி வைப்போம்.

நாம் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற்றவர்கள். எங்களுக்கு சொற்ப தொகைக்காகச் சோரம் போக வேண்டிய தேவை கிடையாது.

இறைவன் தந்த கொடையினை மக்களுக்கு செலவு செய்யவே நாம் வந்துள்ளோம். எமது குழுவில் தொழிலாளர்கள் மட்டுமே போட்டியிடுகின்றனர்.

எல்லா வட்டாரத்திலும் பலமான குடும்பப் பின்னணியும், அந்தஸ்த்தும் உள்ள தொழிலாளர்களையும், தொழில் அதிபர்களையும் களத்தில் இறக்கியுள்ளோம்.

கடந்த காலங்கள் போல் சுயேட்சைக் குழுக்களுக்கு நீங்கள் போடும் வாக்குகள் வீணாகி விடும் என்ற எண்ணம் தேவையில்லை.

புதிய தேர்தல் முறையில் விருப்புத் தெரிவுக்கான ஆசனங்களை மிக இலகுவாகப் பெறக் கூடிய சந்தர்ப்பம் எமக்கே உண்டு. நாம் எனது 5 ஆம் வட்டாரத்தைக் கைப்பற்றி விருப்பு ஆசனம் ஒன்றையும் எளிமையாகப் பெற்றுவிடுவோம்

இன்று குழுமியுள்ள ஆதரவாளர்கள் எல்லோரும் எமது குடும்பத்தினர், நண்பர்கள், தொழிலாளர்கள், இவைகளுக்கு அப்பால் எமது அபிமானிகளின் பலத்துடன் கல்முனை மாநகர சபையின் ஆட்சியைத் தீர்மானிக்கும் சக்தியாக நாம் வருவோம்.

நாம் தெரிவு செய்து மாநகர சபைக்குச் சென்றாலும் எமது உறுப்புரிமையை கலந்தாலோசனைப்படி செய்வோம். வேலைத்திட்டங்களையும் அவ்வாறே செய்வோம்.

இந்த பிரதேசத்திலுள்ள படித்தவர்கள், பண்புள்ளவர்களை இனங்கண்டு அவர்களை மாநகர சபையில் அலங்கரிக்கச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் எமக்குண்டு.

விருப்பு ஆசனங்கள் மூலம் அதனை நிறைவேற்றுவோம். அந்த சந்தர்ப்பத்தை எமக்குத் தந்து பாருங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers