முதன்மை வேட்பாளர் பதவியோ பதமோ இல்லை! அம்பாறை மாவட்ட உதவிதேர்தல் ஆணையாளர்

Report Print V.T.Sahadevarajah in தேர்தல்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் முதன்மை வேட்பாளர் என்றொரு பதவியோ பதமோ இல்லை என அம்பாறை மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளர் திலின விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

மாவட்டத்தில் சில பிரதேசங்களில் முதன்மை வேட்பாளர் என்ற பதம் உபயோகிக்கப்படுகிறது. பிரச்சாரத்தின்போதும் முதன்மை வேட்பாளர் என்ற பதம் பாவிக்கப்படுகின்றது.

பலரின் வேண்டுகோளுக்கமைவாக இது தொடர்பில் தெளிவுபடுத்தலுக்காக அம்பாறை உதவிதேர்தல் ஆணையாளரிடம் தொடர்பு கொண்டுகேட்ட போது அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி மற்றும் சுயேச்சைக் குழுவினால் பெயர் குறித்த நியமனப்பத்திரம் மூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வேட்பாளர்கள் மற்றும் மேலதிக வேட்பாளர்களின் பெயர் விபரங்கள் எம்மால் வெளியிடப்பட்டுள்ளன.

அதில் குறித்த சபையின் பெயர் அச்சபைக்குட்பட்ட வட்டாரத்தின் இலக்கமும் பெயரும் கட்சிகளின் பெயர் வேட்பாளர்களின் பெயர்கள் அதேபோன்று சுயேச்சையின் விபரமும் குறிப்பிடப்பட்டுள்ளன.

இந்த வேட்பாளர் பட்டியல் தமிழிலும் சிங்களத்திலும் இருபுறமும் அச்சிட்டு தபால்மூல வாக்காளர்களுக்கும் வாக்காளர் அட்டைகளுடன் தபால் கந்தோர்களுடாக ஒவ்வொரு குடும்பத்திற்கும் விநியோகிக்கப்பட்டுள்ளன.

அவற்றில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் முதன்மை வேட்பாளர் என்ற பதம் பயன்படுத்தப்படவில்லை என்பதை அறிந்திருப்பீர்கள்.

ஆக எம்முடனான தொடர்புகளுக்காக கட்சியென்றால் அங்கீகரிக்கப்பட்ட முகவரொருவரும் சுயேச்சை என்றால் அதற்கு பொறுப்பாளியாக ஒரு தலைவரொருவரும் நியமிக்கப்படுவார்கள். மற்றும்படி முதன்மை வேட்பாளர் என்று யாருமில்லை என தெரிவித்துள்ளார்.