பலரை கொலைசெய்தே தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி வெற்றி பெற்றது! ஞா.சிறிநேசன்

Report Print Kumar in தேர்தல்

தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களை வேட்டையாடியும், ஆதரவாளர்களை வீட்டுக்குள் முடக்கிவைத்துமே கிழக்கில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி பல வெற்றிகளைப் பெற்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்தார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து, கூழாவடி டிஸ்கோ விளையாட்டு மைதானத்தில் நேற்று இரவு தேர்தல் பிரசாரக்கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். தொடர்ந்தும் பேசுகையில், “தமிழ் மக்களின் ஒரே தெரிவாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே உள்ளது. ஏனைய கட்சிகளில் சீத்துவங்களை அனைவரும் அறிவார்கள்.

கடந்த காலத்தில் தமிழர்களை கொன்று குவித்தவர்களும், படுகொலைசெய்தவர்களும், கடத்திச்சென்று காணாமல் ஆக்கியவர்களும் இன்று தமிழ் மக்களிடம் வாக்கு கேட்டுவருகின்றனர்.

தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினர் செய்த அநியாயங்களை மட்டக்களப்பு மக்கள் ஒருபோதும் மறந்திருக்கமாட்டார்கள்.

கடந்த காலத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பினை அடக்கி ஒடுக்கி, கொலைசெய்து, அவர்களை வெளியில் வராமல் செய்து தனித்து போட்டியிட்டே அன்று அவர்கள் ஆட்சியமைத்தனர்.

ஆனால் இன்று மக்கள் சரியான பாடத்தினை அவர்களுக்கு புகட்டுவார்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.