வவுனியாவில் 1500 பேர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்

Report Print Theesan in தேர்தல்

வவுனியா மாவட்டத்தில் தேர்தல் கடமைகளில் 2 ஆயிரம் அரச அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில் விசேட அதிரடிப்படையினர், பொலிஸார் உள்ளடங்களாக 1500 பேர் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு கூறியுள்ளார்.தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபை தேர்தலுக்குரிய வாக்களிப்புக்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தியாகியுள்ளன.

வவுனியா நகரசபை, வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை, வவுனியா தெற்கு சிங்கள பிரதே சபை, வெண்கல செட்டிகுளம் பிரதேச சபை, வவுனியா வடக்கு பிரதேச சபை என்பவற்றிக்கு 103 அங்கத்தவர்களை தெரிவு செய்வதற்கான தேர்தலுக்குரிய அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தியாக்கப்பட்டுள்ளன.

தேர்தல் திணைக்களம், மாவட்ட செயலகம் மற்றும் அதனுடன் தொடர்புடைய ஏனைய திணைக்களங்களும் இணைந்து தேர்தல் கடமைக்கான ஏற்பாடுகளை செய்திருக்கின்றோம்.

நாளை வவுனியா மாவட்டத்தில் உள்ள 148 வாக்களிப்பு நிலையங்களுக்கும் வாக்குப் பெட்டிகள் கொண்டு செல்லப்படும். வாக்காளர்கள் சிரமமின்றி வாக்களிக்கக் கூடிய முறையில் இந்த 148 வாக்களிப்பு நிலையங்களிலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தற்போதைய தேர்தல் சட்டத்தின் பிரகாரம் அந்த அந்த வாக்களிப்பு நிலையங்களில் தான் வாக்குகள் எண்ணுகின்ற நடவடிக்கைகள் இடம்பெறும்.

இருந்தாலும் நடைமுறை சார்ந்த பிரச்சினைகள் சிலவற்றை காரணமாகக் கொண்டு வவுனியா மாவட்டத்தில் 56 வாக்கு எண்ணும் நிலையங்களை ஏற்பாடு செய்துள்ளோம்.

அந்த நிலையங்களில் வாக்கு எண்ணப்பட்டு வட்டார முடிவுகள் மாவட்ட செயலகத்திற்கு அறிவிக்கப்பட்டு, பின்னர் முடிவுகள் உத்தியோகபூர்வமாக மாவட்ட செயலகம் ஊடாக வெளியிடப்படும்.

இந்த தேர்தல் நடவடிக்கைகளுக்காக வவுனியா மாவட்டத்தில் 2,000 அரச அலுவலர்கள் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். கொழும்பில் இருந்து உதவி தேர்தல் அத்தாட்சி அலுவலர்கள் 155 பேரை அழைத்து இருக்கின்றோம்.

வவுனியா மாவட்டம் முழுவதும் 39 வலயங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வலயங்களுக்கும் ஒவ்வொரு உதவி தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர்களை நியமித்துள்ளோம்.

வாக்களிப்பு தொடர்பான தகவல்களை உடனுக்குடன் பெற்றுக் கொள்வதற்கும், அதனை கண்காணிப்பதற்கும் என 7 மகா வலயங்களையும் உருவாக்கியிருக்கின்றோம். 10 ஆம் திகதி வாக்களிப்பு முடிந்தவுடனேயே வாக்குகள் எண்ணுகின்ற நடவடிக்கையும் இடம்பெறும்.

பொலிஸார், விசேட அதிரடிப்படையினர் என 1500 பேர் தேர்தல் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அசம்பாவிதங்கள் ஏதாவது ஏற்பட்டால் அதனை கட்டுப்படுத்த முப்படையினரும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளார்.