தமிழர்களுக்கு உள்ள எல்லைப் பிரச்சினையை ஜனாதிபதி தீர்த்துவைப்பார்

Report Print Kumar in தேர்தல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் வரலாற்றில் முதன்முறையாக ஆளும் கட்சியாக உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தமிழ் பிரதேச சபை ஒன்றினை கைப்பற்றியுள்ளதாக இலங்கை மக்கள் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் என்.விஸ்ணுகாந்தன் தெரிவித்துள்ளார்.

தேர்தல் வெற்றி தொடர்பில் ஊடகவியலாளர்களை அறிவுறுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று காலை மட்டக்களப்பு கொம்மாந்துறையில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.

குறித்த சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

ஜனாதிபதியின் தலைமைத்துவத்தினை ஏற்று அதிகளவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தமிழ் மக்கள் வாக்களித்துள்ளதுடன், மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும்பாலான சபைகளில் இம்முறை உறுப்பினர்களைப் பெற்றுள்ளனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஏறாவூர்ப்பற்று பிரதேசசபையில் ஆட்சியமைப்பது குறித்து கட்சிகளுடன் பேசிவருவதாகவும் அது தொடர்பில் கட்சி முடிவினை எடுக்கும்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினை தமிழ் பிரதிநிதிகளாகிய நாங்கள் கைப்பற்றியுள்ளபோதிலும் ஜனாதிபதி எமக்கு எந்த வாழ்த்தினையும் தெரிவிக்கவில்லை. ஆனால் ஹிஸ்புல்லாவுக்கு வாழ்த்து தெரிவித்ததாக செய்திகள் வெளிவந்தது.

இந்த வருடத்திற்குள் தமிழர்களுக்கு உள்ள எல்லைப் பிரச்சினை மற்றும் அபிவிருத்தி பிரச்சினைகளை ஜனாதிபதி தீர்த்துவைப்பார் என எதிர்பார்க்கப்படுவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது, மட்டக்களப்பு மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமைப்பாளர் கலையேந்திரன் மற்றும் உள்ளூராட்சி தேர்தலில் வெற்றிபெற்ற வேட்பாளர்களும் கலந்து கொண்டுள்ளனர்.