மாகாணசபைத் தேர்தல்களை ஒத்திப்போடும் முயற்சியில் அரசாங்கம்

Report Print Aasim in தேர்தல்

எதிர்வரும் ஏப்ரல் மாதம் 3 மாகாணசபைகளுக்கான தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று கபே அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக அந்த அமைப்பினால் இன்று விடுக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த வருடம் கலைக்கப்பட்ட கிழக்கு, சப்ரகமுவ மற்றும் வட மத்திய மாகாணங்களுக்கான மாகாணசபைத் தேர்தல் அரசாங்கம் வாக்களித்ததன் அடிப்படையில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் நடத்தப்பட வேண்டும்.

உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல் பின்னடைவு காரணமாக அரசாங்கம் மாகாணசபைத் தேர்தல்களை ஒத்திப்போடும் முயற்சியில் ஆர்வம் கொண்டுள்ளதாக தெரிய வருகின்றது.

கடந்த இரண்டரை ஆண்டுகளாக உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களை நொண்டிக் குற்றச்சாட்டுகளின் பேரில் ஒத்திவைத்ததன் விளைவே அரசாங்கம் தேர்தலில் பின்னடைவை எதிர்கொண்டது.

தற்போதைக்கு மாகாண சபைகளுக்கான எல்லை நிர்ணய அறிக்கை அமைச்சிடம் கையளிக்கப்பட்டு விட்டது.

எனவே இனியும் தாமதம் செய்யாமல் கலைக்கப்பட்ட மூன்று மாகாணசபைகளுக்கான தேர்தல்களை ஏப்ரல் மாதத்தில் நடத்த அரசாங்கம் ஆவண செய்ய வேண்டும் என்றும் கபே அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது.