தமிழ் சிறுவர்களும் தினுல்யா சனாதியைப் போன்றவர்களே!

Report Print Samy in தேர்தல்
105Shares

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், மெதகிரிய, அமுனுகம பிரதேசத்தில் வசித்துவரும் தினுல்யா சனாதி என்ற சிறுமிக்கும் இடையிலான பாசப் பிணைப்புப் பற்றிய செய்திகள் தான் சமூக வலைத்தளங்களில் தற்போது கொட்டிக் கிடக்கின்றன.

கவுடுல்ல பிரதேசத்தில், அண்மையில் நடைபெற்ற கூட்டமொன்றில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொண்டிருந்தார்.

இந்தக் கூட்டத்தில் ஜனாதிபதிக்காகச் செய்யப்பட்டிருந்த பாதுகாப்பு ஏற்பாடுகளைத் தகர்த்துக்கொண்டு அவரை நோக்கி விரைந்து வந்த சிறுமியொருவர் ஜனாதிபதியின் மடியில் ஏறி அமர்ந்து கொண்டார்.

குறித்த கூட்டம் முடியும் வரை அந்தச் சிறுமியை தனது அரவணைப்பில் வைத்திருந்தார் மைத்திரிபால சிறிசேன.

மெதகிரிய அமுனுகம பிரதேசத்தில் கடந்த முதலாம் திகதி நடைபெற்ற நிகழ்வொன்றில் ஜனாதிபதி பங்கெடுத்துள்ளார்.

முன்பு தன்னிடத்தில் ஓடிவந்து தன்னைக் கட்டியணைத்துக் கொண்ட சிறுமியை நினைவில் இருத்தி அவரின் வீட்டுக்குச் சென்று அவருடன் உரையாடியுள்ளார் ஜனாதிபதி.

சிறுமி தினுல்யா சனாதிக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான பாசப்பிணைப்பு அபரிமிதமானது. இந்த விடயத்தில் விமர்சனத்துக்கு ஒன்றுமில்லை.

ஆனால் தமிழர் தாயத்தில் உள்ள சிறுவர், சிறுமியர்களையும் பற்றியும் ஜனாதிபதி கருத்தில் கொள்ள வேண்டும்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நிலையை வெளிப்படுத்தக் கோரி கிளிநொச்சிப் போராட்டக் களத்தில் ஈடுபட்ட சிறுமியொருவர் அண்மையில் பலரினதும் கவனத்தை ஈர்த்திருந்தார்.

அப்பா எங்கே என்று எழுதப்பட்ட பதாகையை ஏந்தியவாறு அந்தப் போராட்டக் களத்தில் பங்கெடுத்திருந்தார் குறித்த சிறுமி. தனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து தனது தந்தையின் முகத்தை அறியாதவர் அவர்.

அவரைப்போன்று நூற்றுக் கணக்கான சிறுவர்கள், சிறுமியர்கள் தமிழர் தாயகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். தத்தமது அப்பாக்களை அவர்கள் அனுதினமும் தேடிக் கொண்டுள்ளார்கள்.

இவர்களுக்கு, ‘காணாமல் ஆக்கப்பட்டவர்கள் என்று எவரும் இல்லை. அவர்களைத் தடுத்து வைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் இடங்களும் இல்லை என்ற பதிலையே ஜனாதிபதி வழங்கியிருந்தார்.

ஜனாதிபதி எப்படிப்பட்டவர் என்று மெதகிரிய அமுனு கம பிரதேசத்தில் வசித்து வரும் தினுல்யா சனாதி என்ற சிறுமியின் மனதில் இருக்கும் எண்ணவோட்டம், தமிழர் தாயகத்தில் வாழும் சிறுவர்களிடம் குறிப்பாக, தத்தமது அப்பாக்களைத் தொலைத்து விட்டு அனுதினமும் தேடித் தவித்துக் கொண்டிருக்கும் சிறுவர்களிடம் இருக்காது.அந்த எதிர்மறை எண்ணவோட்டத்தை மாற்றுவதற்கு ஜனாதிபதி முயற்சிக்க வேண்டும்.

தமிழர் தாயகத்தில் வசிக்கும் சிறுவர்களும் தினுல்யா சனாதியைப் போன்றவர்களே என்ற எண்ணவோட்டைத்தை அவர் கொண்டிருக்க வேண்டும்.

2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதிக்கான தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி மகிந்தவை வீட்டுக்கு அனுப்பி மைத்திரியை அந்த இடத்துக்குக் கொண்டு வந்தவர்கள் தமிழர் தாயக மக்கள்தான்.

அவர்களின் வாக்குகள் தான் மைத்திரியின் வெற்றிக்கான பகடைக்காயாக அமைந்தன. ஆனால் அதற்குரிய கைமாறு எதையும் மைத்திரி செய்யவில்லை.

தான் தெரிவித்ததைப் போன்ற நன்றிக்கடன் எதையும் அவர் செலுத்தவில்லை.தமிழர்களைக் பொறுத்தமட்டில் கடமை தவறிய ஒருவராகவே ஜனாதிபதியினது நிகழ்காலச் செயற்பாடுகள் அமைந்துள்ளன.

தமிழர்களுக்குச் சாதகமானவற்றைச் செய்து, இழந்த தனது இடத்தை மைத்திரிபால சிறிசேன மீட்டெடுக்க வேண்டும். முன்னாள் ஜனாதிபதிகளில் இருந்து தன்னை அவர் வேறுபடுத்திக் காட்ட வேண்டும்.

தத்தமது அப்பாக்களின் குரல் தெரியாது, முகம் தெரியாது, அவர்களுடன் கொஞ்சி விளையாடாது அனுதினமும் மனதளவில் வதைபட்டுக் கொண்டிருக்கும் தமிழர் தாயகச் சிறுவர்களையும் அவர் கருத்தில் கொள்ள வேண்டும்.

‘நோயற்றவர்களுக்கு அல்ல, நோயுற்றவர்களுக்கே மருத்துவர் தேவை’