தணிகின்றது அரசியல் நெருக்கடி! மைத்திரி முன் பிரதமராக ரணில் பதவியேற்பு

Report Print Rakesh in தேர்தல்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் மீண்டும் பிரதமராகப் பதவியேற்கவுள்ளார்.

இந்தத் தகவலை ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன உறுதிப்படுத்தினார்.

நாடாளுமன்றத்தைக் கலைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் அரசமைப்புக்கு முரணானது என்று உயர்நீதிமன்றம் நேற்று மாலை தீர்ப்பளித்தது.

அதையடுத்து பிரதமர் மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட அமைச்சரவையின் நடவடிக்கைகளைத் தடுக்கும் வகையில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்ட இடைக்காலத் தடை உத்தரவை நீக்குவதற்கும் உயர்நீதிமன்றம் இன்று மறுப்புத் தெரிவித்துள்ளது.

உயர்நீதிமன்றத்தின் இந்த அதிரடித் தீர்ப்புகள் மைத்திரி - மகிந்த கூட்டணியை நிலைகுலையச் செய்துள்ளன.

இந்நிலையில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி பிரதமராக நியமிக்கப்பட்ட மகிந்த ராஜபக்ச, தனது பதவியை நாளை இராஜினாமா செய்யவுள்ளார்.

அவர் தலைமையிலான அமைச்சரவையும் நாளை கலையவுள்ளது. இதற்கிடையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் முக்கியத்துவமிக்க சந்திப்புகள் நடைபெற்றன.

இதன்போது எட்டப்பட்ட இணக்கப்பாட்டின் அடிப்படையிலேயே, ரணிலுக்கு மீண்டும் பிரதமர் பதவி வழங்கப்படவுள்ளது.

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தைக் கொண்டுள்ள கட்சிக்கே ஆட்சியமைப்பதற்கு ஜனாதிபதி அழைப்பு விடுக்கவேண்டும். அத்துடன், நாடாளுமன்றத்தில் நம்பிக்கையை வென்ற நபரை பிரதமராக நியமிக்கவேண்டும்.

இவற்றை உறுதிப்படுத்தும் வகையில் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலத்தைக் கொண்ட ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவுக்கு நம்பிக்கை தெரிவிக்கும் தீர்மானம் கடந்த 12ஆம் திகதி சபையில் நிறைவேற்றப்பட்டது.

எனவே, இனியும் இழுத்தடிப்புச் செய்தால் அது பாதகமான விளைவுகளை ஏற்படுத்திவிடும் என்பதாலேயே தனது முடிவை மாற்றி ரணிலுக்கு வாய்ப்பை வழங்க ஜனாதிபதி மைத்திரி முன்வந்தார் எனக் கூறப்படுகின்றது.