பயங்கரவாதத்திற்கு தீர்வாக ஏற்றுக்கொள்ளப்பட்ட விடயம்! தற்போது ஒழிக்கப்பட வேண்டும்

Report Print Steephen Steephen in தேர்தல்

நாட்டில் உள்ள ஒன்பது மாகாணசபைகளில் ஆறு மாகாணசபைகள் செயலிழந்துள்ள போதும் எந்த தடையுமின்றி அந்தந்த மாகாணங்களில் பணிகள் நடைபெறுவதால், மீண்டும் மாகாணசபை தேர்தலை நடத்த வேண்டிய எந்த தேவையும் இல்லை என ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

எம்பிலிப்பிட்டிய - குருஹார பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,

மொத்த மாகாணசபைகளில் 450 உறுப்பினர்கள் இருக்கின்றனர். இவர்களை பராமரிக்க வருடாந்தம் 225 கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.

அது மாத்திரமல்லாது, வெளி வசதிகள், அபிவிருத்தி திட்டங்கள் மூலம் கிடைக்கும் தரகு பணம் உள்ளிட்டவற்றுக்காக வருடாந்தம் 500 கோடி ரூபாய்களுக்கும் மேல் செலவிடப்படுகிறது.

இப்படி பெருந்தொகையான மக்கள் பணத்தை செலவிட்டும் எந்த பிரதிபலனும் கிடைப்பதில்லை. 6 மாகாணசபைகளின் பதவிக்காலம் முடிந்தும் அவற்றில் எந்த பிரச்சினையும் ஏற்படவில்லை.

இவ்வாறான நிலைமையில் மாகாணசபை என்பது தேவையற்ற அங்கமாகியுள்ளது. இந்திய அரசின் அழுத்தம் காரணமாகவே இங்கு மாகாணசபைகள் திணிக்கப்பட்டன.

அது பயங்கரவாதத்திற்கு தீர்வாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. தற்போது பயங்கரவாதம் தோற்கடிக்கபட்டுள்ளதால், மாகாணசபை முறையை உடனடியாக ஒழிக்க வேண்டும் என ஓமல் சோபித தேரர் குறிப்பிட்டுள்ளார்.