மாகாண சபை முறை அவசியம் இல்லை என்றால் சட்டத்திலிருந்து அகற்றுங்கள்! மஹிந்த தேசப்பிரிய

Report Print S.P. Thas S.P. Thas in தேர்தல்

மாகாணசபை முறைமை அவசியமில்லை என்றால் சட்டத்தில் இருந்து அகற்றிவிடவேண்டும். மாறாக ஆளுர்களின் அதிகாரத்துக்கு கீழ் மாகாணங்களை தொடர்ந்து வைத்தருப்பது சட்டத்துக்கு முரணாகும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நாட்டில் அடுத்தவரும் தேர்தல்களுக்காக தேர்தல்கள் செயலகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவுபடுத்தும் செய்தியாளர் சந்திப்பு ராஜகிரியவில் அமைந்துள்ள தேர்தல்கள் செயலகத்தில் இன்று இடம்பெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போது தொடர்ந்தும் பேசிய அவர்,

நீதிமன்றம் தீர்ப்பொன்றை அறிவித்தால் மாத்திரமே ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் மாகாணசபை தேர்தலை நடத்த முடியும். மாகாணசபை முறைமை அவசியமில்லை என்றால் சட்டத்தில் இருந்து அகற்றிவிடவேண்டும். மாறாக ஆளுர்களின் அதிகாரத்துக்கு கீழ் மாகாணங்களை தொடர்ந்து வைத்தருப்பது சட்டத்துக்கு முரணாகும். அதனால் சட்டத்தை மீறாமல் தேர்தலை விரைவாக நடத்த சட்ட நடவடிக்கை எடுக்கவேண்டும்

யாருக்கும் உதவி செய்யும் நோக்கில் மாகாணசபை தேர்தலை நடத்த முயற்சிக்கவில்லை. அவ்வாறான குற்றச்சாட்டை எங்கள் மீது சுமத்தவேண்டாம். ஏனெனில் மாகாணசபை தேர்தலைப்போன்று எதிர்காலத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கும் எல்லை நிர்ணய ஆணைக்குழு அமைத்து இவ்வாறான பிரச்சினை ஏற்பட்டால் என்னசெய்வது? அதனால் தேர்தலை நடத்துவது மாத்திரமல்ல, ஜனநாயக உரிமை மீறப்படும்போது அதற்கு எதிராக செயற்படுவதும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் கடமை.

இதேவேளை, நான் பதவி விலகுவதாக தெரிவித்த கருத்தை இன்னும் மாற்றிக்கொள்ளவில்லை. என்றாலும் விலகினாலோ இல்லாவிட்டாலோ தீர்வு கிடைக்கப்போவதில்லை என்றார்.