அநுர குமாரவின் தேர்தல் விஞ்ஞாபனமும் வெளியானது! எட்டு முக்கிய விடயங்கள் உள்ளடக்கம்

Report Print S.P. Thas S.P. Thas in தேர்தல்
0Shares

அரசியல் கட்சிகள் தேர்தல் மேடைகளில் முன்வைக்கும் அவர்களது தேர்தல் விஞ்ஞாபனங்களில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை நடைமுறைப்படுத்த எதிர்காலத்தில் சட்டரீதியான பிணைப்பு ஒன்றை ஏற்படுத்தவுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

´நம்பிக்கையின் உதயம்´´ என்ற தொனிப்பொருளில் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று (26) கொழும்பு இலங்கை மன்ற கல்லூரியில் வெளியிடப்பட்டது.

ஜனாதிபதி ​வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி 8 முக்கிய விடங்களை உள்ளடக்கி தமது தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரித்துள்ளது.

அறிவால் பூரணமடைந்த நாடு, திருப்திகரமான நாடு, நிலையான நாடு, பசுமையான நாடு, சுபீட்சமான நாடு, சட்டம் மதிக்கப்படுகின்ற நாடு, பாதுகாப்பான நாடு, ஒரே நாடு என்பதே அந்த 8 விடயங்களாகும்.

பொருளாதாரம், சுகாதாரம், கல்வி, போக்குவரத்து, கலாசாரம் உள்ளடங்களாக பல்வேறு துறைகளை மையப்படுத்தி இந்த தேர்தல் விஞ்ஞாபனம் அமைந்திருந்த நிலையில் இது தொடர்பான கொள்கை மற்றும் திட்டங்கள் குறித்து கடந்த தினங்களில் நாட்டின் பல பகுதிகளில் அறிவிக்கப்பட்டிருந்தன.

இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க எந்தவொரு மக்கள் பிரிவின் ஊடாகவும் பிரிவினைவாதம் கட்டியெழுப்பப்படுவதற்கு இடமளிக்க போவதில்லை.

அதேபோல் ஐந்து வருடங்களின் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதிய கொடுப்பனவை நிறுத்தப்படும், ஜனாதிபதிகள் பொதுமக்கள் பணத்தில் வாழ்வதை நிறுத்துவதாகவும், அமைச்சரவையை 30 ஆக மட்டுப்படுத்தவுள்ளன.

தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது, தூய்மையான அரச நிர்வாகத்தை நடைமுறைப்படுத்துவது, விவசாயத்துறையை மேம்படுத்துவது, எந்தவொரு கடும்போக்குவாதமும் உருவாவதற்கு இடமளிக்காதிருப்பது, நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ள அனைத்து காணிகளையும் மீள சுவீகரிப்பது, மக்களின் வாழ்க்கையுடன் இணைந்த புதிய அபிவிருத்தி திட்டமொன்றை தயாரிப்பது என்பன அதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

தகவல் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பை அடிப்படையாகக் கொண்ட கல்வி முறையை உருவாக்குவது தேசிய மக்கள் சக்தியின் முக்கிய நோக்கமாகும்.

அனைத்து தரப்பினரதும் தகைமைகள் மற்றும் திறமைகளுக்கு அமைய, கல்விக்கான சம வாய்ப்பை வழங்குவது, ஒழுக்கமுள்ள பிரஜைகளை உருவாக்குவது தொடர்பிலும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டு மக்களின் சுகாதார வசதிகளை மேம்படுத்துவது மற்றும் இலங்கை எதிர்கொண்டுள்ள பாரதூரமான சுகாதாரப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளும் இதில் முன்வைக்கப்பட்டுள்ளன.

வசிப்பதற்கு ஏற்ற குடியிருப்பொன்றை அனைவருக்கும் வழங்க வேண்டியதன் அவசியம் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதுடன், அதற்காக அதிகபட்ச நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

கலை மற்றும் கலாசாரத்திற்கு கிடைக்க வேண்டிய இடத்தை மீளப் பெற்றுக்கொடுப்பது இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள மற்றுமொரு முக்கிய விடயமாகும்.

நாட்டின் எதிர்காலத்தை கருத்திற்கொண்டு சிறுவர்களுக்கு அனைத்து வசதிகளையும் பெற்றுக்கொடுப்பதும் தேசிய மக்கள் சக்தியின் நோக்கங்களில் ஒன்றாகும்.

தூய்மையான சுற்றாடலுடைய இலங்கையை கட்டியெழுப்புவதற்காக 11 கோட்பாடுகள் உள்ளடங்கிய திட்டமொன்றும் இதில் பிரேரிக்கப்பட்டுள்ளது.

நிலையான பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்காக விவசாயம், கால்நடைவள அபிவிருத்தி, கடற்றொழில் மற்றும் நீரியல் வளம், எரிசக்தி மற்றும் போக்குவரத்து துறைகளை மேம்படுத்துவதற்கான யோசனைகளையும் தேசிய மக்கள் சக்தி முன்வைத்துள்ளது.

இலஞ்ச ஊழலற்ற அரச நிர்வாகத்தை ஏற்படுத்துவதாக உறுதியளிக்கப்பட்டுள்ளதுடன், பொலிஸ் சேவையை மேம்படுத்தி போதைப்பொருள் ஒழிப்பிற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாகவும் அதில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.

தற்கால உலக அரசியலுக்கு பொருந்தும் சுயாதீன தேசிய மக்களின் அபிலாசைகளுக்கு அமைவான வௌிநாட்டுக் கொள்கையை தயாரிப்பதாகவும் தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜனநாயக சமூகம் மற்றும் அதன் இருப்பிற்காக, ஊடக சுதந்திரம் மற்றும் தகவல் தொழில்நுட்ப உரிமைகளை உறுதிப்படுத்துவதாகவும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்போது தேரர்கள், தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த புத்திஜிவிகள், கலைஞர்கள் என பெரும்பாலானவர்கள் கலந்துக்கொண்டனர்.

இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தை தயாரிப்பதற்காக ஒவ்வொரு துறையிலும் பங்களிப்புச்செய்த துறைசார் நிபுணர்களின் பெயர் விபரமும் அதில் உள்ளடக்கப்பட்டுள்ளமை சிறப்பம்சமாகும்.