தமிழர்களின் வாக்கு யாருக்கு? பகிரங்கப்படுத்த தமிழரசுக் கட்சியிடம் வேண்டுகோள்

Report Print Rakesh in தேர்தல்

ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாஸவின் அன்னம் சின்னத்துக்கு வாக்களிக்கத் தமிழ் மக்கள் தீர்மானித்துவிட்டார்கள். எனவே, இலங்கைத் தமிழரசுக் கட்சி தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இதே தீர்மானத்தைக் காலம் தாழ்த்தாது உடன் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள் கூட்டாகத் தெரிவித்தனர்.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட மத்திய குழு உறுப்பினர்கள் ஆகியோரின் கருத்தறியும் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இதன்போதே தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்ட உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள் மேற்கண்டவாறு கூறினர்.

யாழ். மார்ட்டின் வீதியிலுள்ள தமிழரசுக் கட்சியின் அலுவலகத்தில் நேற்றுக் காலை நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, மூத்த துணைத்தலைவர் சீ.வீ.கே.சிவஞானம், பொருளாளர் கனகசபாபதி மற்றும் யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில் சஜித் பிரேமதாஸவையே ஆதரிக்க வேண்டும் என்று உள்ளூராட்சி சபைகளின் தலைவர்கள் தெரிவித்தனர். யாரும் மாற்று யோசனைகளை முன்வைக்கவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளன.