சஜித்தின் தெரிவும்! ரணிலின் அரசியல் விளையாட்டும்...

Report Print Abdulsalam Yaseem in தேர்தல்

நாடு முழுவதும் சஜித்தின் பெயர் உச்சரிக்கப்பட காரணம் ரணிலின் தந்திரமே என ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் நேற்று மாலை தோப்பூரில் இடம்பெற்ற பிரச்சார கூட்டத்தில் உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

இன்று நாடு முழுவதும் சஜித் பிரேமதாசவின் பெயர் உச்ச்சரிக்கப்படுவதுக்கு காரணம் எமது பிரதமரின் தந்திரமே. சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கும் முடிவானது நல்லாட்சி அரசு ஆட்சிபீடம் ஏறிய அன்றே பிரதமரால் எடுக்கப்பட்டது.

அதனாலேயே அமைச்சர் சஜித் பிரேமதாசவின் அமைச்சுக்கு ஏழை மக்களுக்கு வீடுகளை நிர்மாணிக்க அதிகளவிலான நிதி ஒதுக்கப்பட்டது. பின்னர் பிரதமரின் நெருக்கமான அமைச்சர் மங்கள சமரவீர நிதி அமைச்சராக வந்தபின் அந்த நிதி அதிகரிக்கப்பட்டது. இவ்வாறே கிராமங்கள் தோறும் சஜித்தின் செல்வாக்கை அதிகரித்தார் எமது பிரதமர்.

சஜித் வேட்பாளராக நியமிக்கப்படுவாரா? இல்லையா? என குழப்பத்தை ஏற்படுத்தி மொட்டு கட்சியின் ஆதரவாளர்களைகூட சஜித்தின் பெயரை உச்சரிக்க வைத்தது ரணிலின் அரசியல் விளையாட்டு என்பதை அமைச்சர் மங்கள, சஜித் பக்கம் வரும்போதே எங்களுக்கு தெரிந்துவிட்டது.

இப்போது சஜித் பிரேமதாசவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது. அவரது கூட்டத்துக்கு வரும் மக்களை பார்த்தாலே அதை உணர்ந்து கொள்ளலாம். ஆனால் கோத்தபாயவின் கூட்டத்துக்கு வரும் மக்கள் யார் என்ற உண்மை அண்மையில் நடைபெற்ற கொலன்னாவ கூட்டத்தில் வெளிச்சத்துக்கு வந்தது.

அந்த கூட்டத்தில் கோத்தபாய உரையாற்றிக்கொண்டிருக்கும் போது சிலர் எங்களுக்கு யானை வேலி அமைத்து தரும்படி கேட்கின்றனர். கொழும்பில் யாருக்கு யானை வேலி தேவைப்படும். அந்த கூட்டத்துக்கு வந்தவர்கள் யானைவேலி தேவைப்படும் கிராமபுறங்களில் இருந்து அழைத்து வரப்பட்டவர்கள்.

இப்போது அவர்கள் கூட்டத்துக்கு அந்த பிரதேச மக்களை கூட கூட்ட முடியாத வங்குரோத்து நிலையினைஅடைந்துள்ளார்கள்.

எனவே இப்போதே வெற்றி உறுதி செய்யப்பட்ட எமது வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியில் நாமும் பங்காளர்களாக மாற எம்மோடு ஒன்றிணையுங்கள், என தெரிவித்தார்.