தோட்ட தொழிலார்களின் சம்பள உயர்வு என்பது வாக்கு சேகரிக்கும் உத்தியே : திலகராஜ் எம்.பி

Report Print Gokulan Gokulan in தேர்தல்

தந்தை ரணசிங்க பிரேமதாசவின் வழியில் தனிவீட்டின் பெறுமதியை உணர்ந்தவர் சஜித் பிரேமதாச என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் திலகராஜ் தெரிவித்துள்ளார்.

ஹங்குராங்கத்தை பிரதேச சபைக்கு உட்பட்ட முல்லோயா, ஹோப் வட்டாரங்களின் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்து கொண்டு உரை ஆற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

மலையக மக்களின் பகுதியளவினருக்கு பிரஜாவுரிமை மறுக்கப்பட்டிருந்த நிலையில் அதனைப் பெற்றுக் கொடுத்தவர் ரணசிங்க பிரேமதாச என்றே இன்று பரவலாக பேசப்படுகிறது.

அதே நேரம் அவர் ஏழை எளிய மக்களுக்கு வீடமைப்புத் திட்டங்களை முன்னெடுத்து இலங்கையில் மாத்திரமன்றி சர்வதேச ரீதியிலும் நற்பெயரைப்பெற்றார். இதனால் 1987 ஆம் ஆண்டு சர்வதேச வீடமைப்பு ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டது.

அவரது வழியில் மகன் சஜித் பிரேமதாச வீடமைப்பு அமைச்சராக இலங்கையில் பல வீடமைப்புத் திட்டங்களையும் மாதிரி கிராமங்களையும் முன்னெடுத்து வருகிறார். அதனால்தான் மலையக மக்களுக்கு முன்னெடுக்கப்பட்டுவரும் தனிவீட்டுத் திட்டத்தையும் புதிய கிராம அமைப்பையும் தொடர்ந்து முன்னெடுக்க தனது விஞ்ஞாபனத்தில் உறுதி அளித்துள்ளார்.

மலையகத்தில் தேர்தல் காலம் ஆகட்டும் இல்லாத காலமாக இருக்கட்டும் சம்பளப்பிரச்சினை மட்டுமே இருப்பது போல ஒரு தோற்றப்பாட்டைக் காட்டுவார்கள். இரண்டு ஆண்டுக்கு ஒரு தடவை அதில் கையொப்பம் இடுபவர்கள் தான் அதுபற்றி அதிகம் பேசுவார்கள்.

நேற்றுத்தான் தோட்டத்திற்கு சிறுத்தை வந்தது போல ஒரு தொழிற்சங்க தலைவர் தோட்டங்கள் தோறும் கூவித் திரிகிறார். அவர்கள் செய்து கொள்ளும் கூட்டு ஒப்பந்தம்தான் தோட்டங்கள் காடானதற்கும் சிறுத்தை உள்ளே வந்ததற்கும் சம்பளம் குறைந்ததற்கும் காரணமாகும். அவர்கள் கட்சி நடாத்த கூட்டு ஒப்பந்தத்தை கையில் வைத்துக்கொண்டுள்ளார்கள். இன்று ரூ 50 தான் அவர்களது பிரச்சினை. அதை வைத்துதான் ஜனாதிபதி தேர்தலுக்கும் வாக்கு கேட்கிறார்கள்.

தோட்டத் தொழிலாளர்களின் சம்பளப்பிரச்சினை இன்று நேற்று உருவானதல்ல. 1940 ல் முல்லோயா மண்ணின் மைந்தன் தனது உயிரை துப்பாக்கிச்சூட்டில் இழந்தது பத்து சத சம்பள உயர்வு போராட்டத்தில் ஆகும். இன்று ரூ 1000 ஐ தூக்கி கொண்டு கூவி திரிபவர்கள் அதனை வாக்கு சேகரிக்கும் போராட்டமாக்கியுள்ளனர்.

ஆனால், சம்பளப்பிரச்ணினைக்கு வெளியே மலையக மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளான வீடு, கல்வி, சுகாதாரம், அதிகார பகிர்வு, பெருந்தோட்டத்துறை முறைமை மாற்றம் என பல விடயங்களில் நாம் கொள்கை வகுத்து செயற்பட்டு வருகின்றோம். அதனால்தான் கோவிந்தன் உயிரிழந்த முல்லோயா மண்ணில் அவரது பெயரில் “ கோவிந்தன்புரம்” கிராமத்தை எம்மால் அமைக்க முடிந்தது . இது போல மலையகமெங்கும் அமைக்க காணி உரிமையையும் , தனிவீட்டு உரிமையையும் ஏற்றுக்கொள்ளும் ஜனாதிபதி வேட்பாளர் யார் என நாம் அடையாளம் காண வேண்டியுள்ளது.

ரணசிங்க பிரேமதாச ஏழை மக்களும் தனக்கென ஒரு தனிவீட்டில் வாழவேண்டும் என எண்ணம் கொண்டு தேசிய வீடமைப்புத் திட்டத்தை முன்வைத்து சர்வதேச புகழ் பெற்றார். தந்தையின் மனநிலை போன்றே சஜித் பிரேமதாசவும் அதனை ஏற்று முன்கொண்டு செல்கின்றார்.

ஆனால், இராணுவ மனநிலையில் வாழ்ந்த கோத்தபாயவோ இராணுவ முகாம்போல மலையக மக்களுக்கு மாடி லயம் அமைக்கப்படும் என்றே தனது விஞ்ஞாபனத்தில் கூறியுள்ளார். எனவே தான் சஜித் பிரேமதாசவை ஜனாதிபதியாக்க அன்னம் சின்னத்துக்கு வாக்களிக்குமாறு கோருகின்றோம், என்று தெரிவித்தார்.