யாழ் மக்களுக்கு நான் ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகிறேன்! கிட்டு பூங்காவில் வைத்து சஜித் வழங்கிய உறுதி மொழிகள்

Report Print Sumi in தேர்தல்

வடகிழக்கிற்கு வேறாக, வெளிநாட்டு உதவித் திட்டங்களைப் பெற்று, விசேடமான கூட்டத் தொடரைப் நடாத்தி, அபிவிருத்தியின் உச்சகட்டத்தில் திகழும் ஒரு மாகாணமாக இந்த வடகிழக்கு மாகாணங்களை மாற்றியமைப்போம் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

“ ஒன்றாய் முன்னோக்கி” எனும் தொனிப்பொருளிலான புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் பிரசார கூட்டம் யாழ்.கிட்டு பூங்காவில் இன்று (08) நடைபெற்றது. அங்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

வீதி அபிவிருத்தி, கலாசார மண்டபங்கள் அமைத்தல், சமூக சேவை தொடர்பான விடயங்களை மேம்படுத்தல், மீன்பிடிக் கைத்தொழில் ஜனாதிபதியானதன் பின்னர், அபிவிருத்தியில் முன்னணியாக திகழும் மாவட்டமாக மாற்றுவேன்.

வறுமையைப் போக்குவதற்காக தற்போது நாட்டில் சமுர்த்தி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 44 லட்சம் பாடசாலை மாணவர்கள் உள்ளனர். அவர்களுக்கு இரண்டு பாடசாலை சீருடைகளும், பாதணிகளும், மதிய உணவும் இலவசமாக கொடுக்கப்பேன் என உறுதியளித்தார்.

பாலர் பாடசாலையை கட்டி எழுப்புவதற்கான நடவடிக்கையை எமது அரசாங்கத்தில் மேற்கொள்வோம். தற்போது பணம் செலுத்தி தான் பாலர் பாடசாலை இடம்பெறுகின்றது. பாலர் பாடசாலை ஆசிரியர்களுக்கு அரச சம்பளம் வழங்கப்படும். பாலர் பாடசாலைக் கல்வியை முற்றாக இலவச கல்வித் திட்டத்திற்குள் இணைப்பேன்.

விவசாய துறையை மேம்படுத்துவதற்காக எமது அரசாங்கத்தில் நடவடிக்கை எடுப்போம். யாழில் நல்லூர்;, வலிகாமம், காரைநகர், உள்ளிட்ட 15 பிரதேச செயலகங்கள் உள்ளன. 15 பிரதேச செயலகங்களிலும் விசேடமாக ஒவ்வொரு தொழில்நுட்ப கல்லூரிகள் உருவாக்கப்படும். அதேபோன்று, தொழில்நுட்ப மையம், தொழில்நுட்ப பூங்கா என்பன அவற்றுடன் இணைந்து உருவாக்கப்படும். இதனூடாக இளைஞர் யுவதிகள் வேலை வாய்ப்பினைப் பெறக்கூடிய வாய்ப்புக்கள் கிடைக்கும்.

அதேபோன்று, தகவல் தொழில்நுட்பம், கணணி தொழில்நுட்பம், ஆங்கில அறிவு உள்ளிட்டவற்றைப் பெற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும். ஆதற்குரிய பணத்தையும், இடத்தினையும் பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டங்களை எமது அரசாங்கத்தினால் வழங்குவோம்.

விசேடமாக, யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக இந்த யாழ்.மாவட்டம் இருக்கின்றது. சிறு கைத்தொழில் புரிகின்றவர்கள், பாரிய கைத்தொழில் திட்டங்களை மேற்கொள்பவர்களுக்கு, அனைத்து உதவித் திட்டங்களையும் வழங்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கின்றோம்.

அதேபோன்று யுத்தத்தின் காரணமாக தமது அவையங்களை இழந்தவர்களுக்கு விசேட தேவைத் திட்டத்தின் கீழ், அவர்களுக்கான உதவித் திட்டங்களை வழங்குவோம். வடகிழக்கிற்கு வேறாக, வெளிநாட்டு உதவித் திட்டங்களைப் பெற்று, விசேடமான கூட்டத் தொடரைப் நடாத்தி, அபிவிருத்தியின் உச்சகட்டத்தில் திகழும் ஒரு மாகாணமாக இந்த வடகிழக்கு மாகாணங்களை மாற்றியமைப்போம்.

யுத்தத்தின் பின்னர், வடகிழக்கில் சர்வதேச மாநாட்டை நடாத்த முடியாமல் போயுள்ளது. என்னுடைய அரசாங்கத்தின் கீழ், விசேடமாக வடகிழக்கில் அந்த மாநாடுகளை நடாத்துவேன்.

அதேபோன்று, ஒரு நாட்டில் ஒருமித்த நாட்டில், இன, மத, மொழி, கட்சி பேதமின்றி, சிங்களம், தமிழ், முஸ்லிம் என்ற பேதமின்றி, ஒரே குடையின் கீழ், ஒரு தாய் மக்களாக, ஒரு சட்டத்தின் கீழ் ஒழுகக்கூடிய ஒரு அமைப்பை எதிர்கால அரசாங்கத்தில் நான் உருவாக்குவேன்.

இறுதியாக யாழ்.மாவட்டத்தில் 15 செயலகங்கள் உள்ளன. அதில் 435 கிராம சேவையாளர் பிரிவு உள்ளது, 1611 கிராமங்கள் உள்ளன. இதை உள்ளடக்கிய அனைத்து வாழ் மக்களுக்கும், ஒன்றைக் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். இந்தக் கிராமங்களையும் அபிவிருத்தி செய்வேன் என உறுதியளித்தார்.