அடுத்துவரும் 10- 15 வருடங்களுக்கு சஜித்திற்கு இருக்கும் தகுதி! டி.எம்.சுவாமிநாதன் பேச்சு

Report Print Thileepan Thileepan in தேர்தல்

25 வருடங்களுக்கு பிறகு ஐக்கிய தேசியக் கட்சி சேர்ந்த ஒருவர் போட்டியிட சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதனை சரியாக பயன்படுத்த வேண்டும் என முன்னாள் அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தார்.

வவுனியா, வைத்தியசாலை முன்பாக ஐக்கிய தேசிய கட்சியின் வன்னி மாவட்ட இணைப்பாளர் ரசிகா கமகே அவர்களின் அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

சஜித் பிரேமதாச ஒரு நேர்மையான மனிதர். செய்யும் செயற்பாடுகளை தனது தந்தையாரைப் போல் நேர்மையாக செய்பவர். ஜெயவர்த்தனா, பிரேமதாச அதன் பின்னரான தலைவர்கள் என பலருடன் ஐக்கிய தேசிய கட்சிக்காக நான் வேலை செய்தேன். என்னைப் பொறுத்தவரை ஐக்கிய தேசியக் கட்சி தான் முக்கியம்.

கடந்த 1977 இல் இருந்து நான் ஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கின்றேன். அந்தக் கட்சியில் இருந்து வேறு கட்சிகளுக்கு தாவவில்லை. அந்தவகையில் இன்று ஜனாதிபத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி முக்கியத்துவம் பெறுகிறது. அதற்கு எங்களுடைய அபேட்சகர் சஜித் பிரேமதாச தான் காரணம். அவர் நிச்சயமாக 16 ஆம் திகதி வென்று எங்களுடைய தமிழ் மக்களுக்கு இருக்கும் பிரச்சனைகளை தீர்ப்பார்.

ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் ஒரு ஜனாதிபதி வேட்பாளர் போட்டியிடுகின்றார் என்பது பெருமைப்பட வேண்டிய விடயம். 25 வருடங்களுக்கு பிறகு ஐக்கிய தேசியக் கட்சி சேர்ந்த ஒருவர் போட்டியிட சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. அதுவரை வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் தான் ஐக்கிய தேசியக் கட்சியின் தயவில் ஜனாதிபதியாக வந்திருக்கின்றார்கள். தற்போதைய ஜனாதிபதி சிறிசேனாவும் எங்களுடைய கட்சியல்ல.

ஆனாலும் நாங்கள் சேர்ந்து அவருடைய பெயரை ஆமோதித்தோம். ஆனால் இன்று அப்படியில்லை. எங்களுடைய ஐக்கிய தேசியக் கட்சியைச் சேர்ந்த சஜித் பிரேமதாச அவர்கள் போட்டியிடுகின்றார்.

உங்களுக்கு எத்தனையோ பிரச்சனைகள் தமிழ் மக்களுக்கு இருக்கின்றது. அரசியல் பிரச்சினைகள் இருக்கின்றன. அதை அரசியல்வாதிகள் சஜித் பிரேமதாசவுடன் பேசி தீர்ப்பார்கள். தற்போது பொருட்களின் விலைவாசி கூடியுள்ளது. வரி காரணமாகவே அவ்வாறு கூடியுள்ளது. அந்த நிலைப்பாட்டை நாங்கள் குறைக்கலாம். சஜித் பிரேமதாச நாட்டின் தலைவராக வந்தால் அவர் வெளிநாட்டில் இருக்கும் முதலீட்டின் மூலம் வருமானத்தை கூட்டலாம்.

தற்போது ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடக்கும் அரசாங்கத்தில் சென்ற ஆண்டு முன்னைய அரசாங்கம் பெற்ற கடன்களை நாங்கள் செலுத்தியிருக்கிறோம். அதை கட்டித் தான் இவ்வளவு வேலைகளையும் செய்யப்பட்டது.

முன்னைய அரசாங்கத்தின் கடனை செலுத்தினோம். அது எமது கடமை. அதனை நான்கரை வருடமாக ஐக்கிய தேசியக் கட்சி செலுத்தியது. அந்த கடனில் 75 - 80 வீதம் கட்டியாச்சு. இனி எல்லோரும் நன்மையாக வாழக் கூடிய நிலை உருவாகும்.

அடுத்து வரும் 10- 15 வருடமாக ஜனாதிபதியாக இருக்க சஜித்திற்கு தகுதி இருக்கிறது. இளம் வேட்பாளர் அவர். அவர் இந்த நாட்டை இன்னும் செழுமையாக மாற்றுவார் என்றார்.

இந்நிகழ்வில் ஐக்கிய தேசியக் கட்சியின் வன்னி மாவட்ட அமைப்பாளர் ரசிகா கமகே, பிரஆதச சபை உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.