வடக்கு - கிழக்கு தமிழ் மக்களுக்கு மஹிந்த ராஜபக்ஸ கொடுத்துள்ள அறிவுரை

Report Print Rakesh in தேர்தல்

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்கு ஆதரவளிக்க இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள முடிவு முட்டாள்தனமானது என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தீர்மானித்துள்ளனர். இது தொடர்பில் செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும்போதே மஹிந்த ராஜபக்ஸ இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் இது தொடர்பில் கருத்து வெளியிடுகையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ள இந்த முடிவு படுகேவலமானது. இந்தத் தீர்மானம் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களை நட்டாற்றில் விட்டமைக்குச் சமனானது.

எனவே, வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள் தீர்க்கமான அரசியல் தீர்மானத்தை எடுத்து தங்கள் வாக்குகளை பயன்படுத்த வேண்டும்.

சஜித் பிரேமதாசவைத் தோற்கடிக்க வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சி அரசை வீட்டுக்கு அனுப்ப வேண்டும்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீர்மானம் நாட்டில் மீண்டும் ஊழல், மோசடி நிறைந்த ஆட்சிக்கும், பொருளாதார வீழ்ச்சிக்கும் தூபமிடுகின்றது.

ரணில் விக்ரமசிங்கவின் வால்களாக செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கடந்த நான்கு வருடங்களாக சுகபோக வாழ்க்கையையே அனுபவித்து வருகின்றார்கள்.

ஆனால், அவர்களை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய வடக்கு, கிழக்கு தமிழ் மக்களோ தங்கள் வாழ்க்கையைக் கொண்டு நடத்துவதில் சொல்லொணாத் துயரங்களை அனுபவிக்கின்றார்கள்.

வடக்கு - கிழக்கில் கடன் தொல்லையால் அவர்கள் படும் வேதனைகள் வார்த்தைகளில் சொல்ல முடியாதவை.

எனவே, அம்மக்கள் இந்த ஜனாதிபதித் தேர்தலில் தீர்க்கமான அரசியல் முடிவை எடுத்து தங்கள் வாக்குகளை பயன்படுத்த வேண்டும் என்று கூறி வடக்கு கிழக்கு வாழ் மக்களை பொதுஜன பெரமுனவிற்கு வாக்களிக்க கேட்டுக் கொண்டுள்ளார்.

Latest Offers