ஜனாதிபதித் தேர்தல் இரண்டு கட்சிகளுக்கும் தீர்மானகரமானது

Report Print Steephen Steephen in தேர்தல்

இம்முறை ஜனாதிபதித் தேர்தல் இரண்டு பிரதான கட்சிகளுக்கும் மிக தீர்மானகரமான தேர்தல் என அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தெரிவித்துள்ளார்.

கண்டி, அக்குரணையில் நடைபெற்ற புதிய ஜனநாயக முன்னணியின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,

இந்த தேர்தலில் தவறியேனும் ஐக்கிய தேசியக் கட்சி தோற்றால் அடுத்த 30 ஆண்டுகளுக்கு ஆட்சிக்கு வர முடியாது. ராஜபக்ஸவினர் ஐக்கிய தேசியக் கட்சியை ஆட்சிக்கு வர விடமாட்டார்கள்.

அதேபோல் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இந்த தேர்தலில் தோல்வியடைந்தால், அந்த கட்சியினருக்கு எதிரான கொலை, காணாமல் ஆக்கப்பட்டமை, வெள்ளை வான் கடத்தல் போன்ற பல வழக்குகளில் அவர்களுக்கு தண்டனை கிடைக்கும்.

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற பொதுஜன பெரமுன அனைத்து முயற்சிகளை எடுக்கும். மக்களுக்கு மிகப் பெரிய பொய்களை கூறி அவர்கள் தேர்தலில் வெற்றி பெற முயற்சித்து வருகின்றனர்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை வழங்குவதாக நாங்கள் வாக்குறுதியளித்தோம். மஹிந்த ராஜபக்ஸவும், ரணில் விக்ரமசிங்கவும் வெவ்வேறான நிலைப்பாடுகளை கொண்டவர்கள்.

மஹிந்த ராஜபக்ஸ செய்வதை போல் ரணில் விக்ரமசிங்க செய்ய மாட்டார். உதாரணமாக அன்று பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, மஹிந்த ராஜபக்ஸவுக்கு எதிரான ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்டார்.

தேர்தலில் மகிந்த ராஜபக்ச வெற்றி பெற்ற பின்னர், சரத் பொன்சேகாவை சட்டையை பிடித்து இழுத்துச் சென்று சிறையில் அடைத்தனர்.

அவரது ஆட்சியில் எந்த சட்ட திட்டங்களும் இருக்கவில்லை. எந்த நீதிமன்றத்திலும் விசாரணைகள் இல்லை. மஹிந்த ராஜபக்ஸ இப்படித்தான் செயற்பட்டார்.

நாங்கள் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை எப்போது நிறைவேற்றுவது என்று நாங்கள் அடிக்கடி அமைச்சரவையில் பிரதமரிடம் கேட்டோம். அனைத்து சந்தர்ப்பங்களிலும் நாட்டில் சட்டம் இருக்கின்றது என்று பிரதமர் கூறுவார். சட்டத்தை நாம் அனைவரும் மதிக்க வேண்டும் என்று கூறுவார் எனவும் அமைச்சர் ஹலீம் குறிப்பிட்டுள்ளார்.