நாடளாவிய ரீதியில் வாக்குப்பெட்டிகளை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பம்

Report Print Sumi in தேர்தல்

நாளைய தினம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடிகளுக்கான வாக்குப்பெட்டிகளை விநியோகிக்கும் பணிகள் நாடளாவிய ரீதியில் ஆரம்பித்துள்ளன.

திருகோணமலை

நாளை நடைபெறவுள்ள 8 ஆவது ஜனாதிபதி தேர்தலில் திருகோணமலை மாவட்ட மக்கள் வாக்களிப்பதற்காக 307 வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்கு பெட்டிகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

இந்த வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் திருகோணமலை தொழில்நுட்பக் கல்லூரியில் வைத்து சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலர்களிடம் கையளிக்கப்பட்டு, பின்னர் வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச் செல்லலப்பட்டன.

இந்த தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் 4 ஆயிரம் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தேர்தல் கடமையில் ஈடுபடவுள்ளனர்.

செய்தி அப்துல் சலாம் யாசீம்

அம்பாறை

நாளை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் அம்பாறை ஹாடி உயர் தொழிநுட்ப வளாகத்தில் இருந்து வாக்குசாவடிகளுக்கு பொலிஸ் பாதுகாப்புடன் காலை கொண்டு செல்லப்பட்டுள்ளன.

அம்பாறை மாவட்டத்தில் பொத்துவில், சம்மாந்துறை, கல்முனை, திகாமடுல்ல ஆகிய தேர்தல் தொகுதிகளில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.

மேலும் வாக்குப் பெட்டிகள் உரிய வாக்கெடுப்பு நிலையங்களை சென்றடைந்தது முதல் பொலிஸ் நடமாடும் சேவை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

செய்தி மற்றும் படங்கள் வருணன்

யாழ்ப்பாணம்

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியிலிருந்து யாழ்ப்பாணத்திலுள்ள ஏனைய வாக்குச்சாவடிகளுக்கான வாக்குப்பெட்டிகள் பொலிஸ் பாதுகாப்புடன் எடுத்துச்செல்லப்பட்டுள்ளன. ஊர்காவற்துறை , மானிப்பாய் , கோப்பாய் போன்ற இடங்களுக்கான வாக்குப்பெட்டிகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

வவுனியா

வவுனியா மாவட்டத்தில் 142 வாக்களிப்பு நிலையங்களில் 117,333 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் வாக்களிப்பு நிலையங்களுக்கான வாக்குபெட்டிகள் அரச ஊழியர்களின் பங்களிப்பில் மாவட்ட செயலகத்தில் இருந்து பொலிஸ் பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டுள்ளன.

தேர்தல் கடமைகளை இலகுபடுத்தும் முகமாக வவுனியா மாவட்ட செயலக வாயிலின் முன்பகுதியில் தேர்தல் பிரிவுக்களுக்கான வரைபடமும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

இதேவேளை தேர்தல் கண்காணிப்பாளர்களும் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதனை காணக்கூடியதாக உள்ளதுடன் வன்முறைகளை கண்காணிப்பதற்காக இரகசிய கமராக்களுடன் பொலிஸார் ரோந்து நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

செய்தி மற்றும் படங்கள் தீசன்

மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவுகளுக்கான வாக்குப்பெட்டிகள் வாக்கு சீட்டுகளை கொண்டுசெல்லும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மூன்று தேர்தல் தொகுதிகளிலும் மொத்தமாக 3 இலட்சத்து 98 ஆயிரத்து 301 (3,98,301) வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

பாதுகாப்பு கடமைகளுக்காக 1688 பொலிஸ் உத்தியோகத்தர்கள், 320 சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் இணைப்பட்டுள்ளனர். ஒவ்வொரு வாக்கெடுப்பு நிலையங்களுக்கும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் கணக்கெடுப்பு நிலையங்களுக்கும் பாதுகாப்பு கடமைக்கு இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் இணைக்கப்பட்டுள்ளனர். இதனை தவிர ரோந்துப்பணியில் விசேட பொலிஸ் பிரிவினர் பங்கெடுக்கவுள்ளனர்.

வாக்குப்பெட்டிகளை கையளிப்பதற்கு என 54 உதவி தெரிவத்தாட்சி அலுவலர்கள் கடமைக்கு இணைக்கப்பட்டுள்ளனர். அதனை தவிர வலயங்களுக்கு பொறுப்பான உதவி தெரிவத்தாட்சி அலுவலர்களும் கடமைகளை பொறுப்பேற்றனர்.

தேர்தல் பணியினை கண்காணிப்பதற்கான கண்காணிப்பு குழுவின் சர்வதேச உள்நாட்டு கண்காணிப்பாளரின் தங்களது கண்காணிப்பு பணியினை முன்னெடுத்துவருகின்றனர்.

செய்தி மற்றும் படங்கள் குமார்

நுவரெலியா

நுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் நுவரெலியா காமினி சிங்கள வித்தியாலயத்திலிருந்து ஏனைய வாக்குச்சாவடிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

நுவரெலியா மாவட்டத்தில் 488 வாக்களிப்பு நிலையங்களில் 569,028 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா – மஸ்கெலியா, கொத்மலை, ஹங்குராங்கெத்த, வலப்பனை ஆகிய தேர்தல் தொகுதிகளில் உள்ள வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். மேலும், 48 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இதில் 33 வாக்கு எண்ணும் நிலையங்கள் நுவரெலியா காமினி மகா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ளதோடு, மிகுதி 15 வாக்கு எண்ணும் நிலையங்கள் நுவரெலியா மாவட்ட செயலகத்தில் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்களிப்பு நிலையங்களில் 6800 பேர் கடமையில் ஈடுப்பட்டுள்ளதோடு, பாதுகாப்புக்காக பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொலிஸாரும் 1590 பேர் கடமையில் ஈடுப்பட்டுள்ளனர்.

செய்தி மற்றும் படங்கள் திருமால்

மன்னார்

மன்னார் மாவட்டச் செயலகத்தில் இருந்து மன்னார் மாவட்டத்தில் உள்ள 76 வாக்களிப்பு நிலையங்களுக்கு வாக்குப் பெட்டிகள் கொண்டுச் செல்லும் நடவடிக்கைகள் இன்று காலை 8 மணியளவில் ஆரம்பமாகியுள்ளது.

மன்னார் மாவட்டச் செயலக பகுதியில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் மன்னார் மாவட்டச் செயலக பிரதான வீதி போக்குவரத்திற்காக மூடப்பட்டுள்ளதோடு, மாற்றுப்பாதையூடாக போக்குவரத்து இடம் பெற்று வருகின்றது.

நியமிக்கப்பட்ட அரச அதிகாரிகள் மற்றும் பொலிஸார் அரச,மற்றும் தனியார் பேரூந்துகளில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப் பெட்டிகளை வாக்களிப்பு நிலையங்களுக்கு விநியோகித்து வருகின்றனர்.

மன்னார் மாவட்டத்தில் இம்முறை தேர்தல் நடவடிக்கைகளுக்காக 1365 அரச அலுவலகர்கள் கடமையில் ஈடு படுத்தப்பட்டுள்ளதுடன் வாக்களிப்பதற்கு 89 ஆயிரத்து 403 பேர் தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

செய்தி மற்றும் படங்கள் ஆஷிக்

கிளிநொச்சி

கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் அமைந்துள்ள தேர்தல்கள் அலுவலகத்திலிருந்து தேர்தல் வாக்கு சீட்டுக்கள், வாக்கு பெட்டிகள் வாக்களிப்பு நிலைய அதிகாரிகளால் பலத்த பாதுகாப்புடன் எடுத்து செல்லப்பட்டுள்ளன.

கிளிநொச்சி மாவட்டத்தில் 100 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் வாக்காளர்கள் காலை 7 மணிமுதல் பிற்பகல் 5 மணிவரை வாக்களிக்க முடியும் எனவும், நேர காலத்தோடு வாக்களிக்க மக்கள் வாக்களிப்பு நிலையங்களிற்கு செல்லுமாறும் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும், அரசாங்க அதிபருமான சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

செய்தி மற்றும் படங்கள் யது

முல்லைத்தீவு

முல்லைத்தீவு மாவட்டத்தில் 13,535 வாக்கடுப்பு நிலையங்களும் தயார்படுத்தும் பணியில் அரச உத்தியோகத்தர்கள் ஈடுபட்டிருந்தனர்.

நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்ட செயலகம் மற்றும் தேர்தல் திணைக்களமும் இணைந்து மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 75,381 வாக்காளர்களுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு 135 வாக்கெடுப்பு நிலையங்கள் உருவாக்கப்பட்டு அதற்கான உத்தியோகத்தர்கள் பொலிஸாரோடு அந்தந்த நிலையங்களுக்கு சென்று வாக்கெடுப்பு நிலையங்கள் தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில் தற்போது வாக்கெடுப்புக்கான வாக்குப்பெட்டிகள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் இருந்து வாக்களிப்பு நிலையங்கள் நோக்கி எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

செய்தி மற்றும் படங்கள் மோகன்