சுமூகமான தேர்தலை நடத்த ஒத்துழைப்பு வழங்குமாறு வேண்டுகோள்

Report Print Yathu in தேர்தல்

தேர்தல் ஏற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதுடன், சாதாரண அமைதியானதும், சுமூகமானதுமான தேர்தலை நடத்த ஒத்துழைப்பு வழங்குமாறு கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்,

நாளை இடம்பெறவுள்ள இலங்கையின் 8ஆவது ஜனாதிபதி தேர்தலிற்கான ஆரம்ப நடவடிக்கைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. அந்தவகையில் இன்று காலை 7.45 மணி முதல் வாக்குப்பெட்டிகளை விநியோகிக்கும் பணிகள் இடம்பெற்று வருகின்றது.

வாக்குப்பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்கள் நோக்கி தேர்தல் வாக்களிப்பு நிலைய அதிகாரிகள் எடுத்துச் சென்றுள்ளனர். தேர்தல் கடமைகளிற்காக 1750 அரச உத்தியோகத்தர்கள் கடமைகளில் ஈடுபட்டுள்ளதுடன், கிளிநொச்சி மாவட்டத்தில் 100 வாக்களிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

வாக்களிப்பு நிறைவு பெற்றதும், வாக்குகளை எண்ணுவதற்காக கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் 7 வாக்கெண்ணும் நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

தேர்தல்கள் திணைக்களத்தின் அனுமதியுடன் உள்நாட்டு, வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் ஈடுபட்டு வருவதாகவும், வாக்களிப்பு நிலையங்களிற்கு 2 பொலிஸார் வீதம் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், அவர்கள் சுற்று காவல் நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

காலை 7 மணி தொடக்கம் 5 மணி வரை மக்கள் வாக்களிப்பதற்கான நேரமாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், தற்போதைய காலநிலையை கருத்தில்கொண்டு இயலுமானவரை மக்கள் நேரத்திற்கு சென்று வாக்களிக்குமாறு மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவித்துள்ளார்.

சாதாரண அமைதியானதும், சுமுகமானதுமான தேர்தலை நடத்துவதற்கு அனைவரும் ஒத்துழைப்பு வழங்குமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தேர்தல்கள் தொடர்பிலான முறைப்பாடுகளிற்காக மாவட்ட செயலகத்தில் ஒரு பிரிவு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

அவ்வாறு முறைப்பாடுகள் இருப்பின் கீழ்வரும் இலக்கங்களான 0213900151, 0213034051 தொடர்பினை ஏற்படுத்தி முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும் எனவும் சுந்தரம் அருமைநாயகம் குறிப்பிட்டுள்ளார்.