வவுனியாவில் 2,155 பாதுகாப்பு தரப்பினர் தேர்தல் கடமையில்

Report Print Thileepan Thileepan in தேர்தல்

வவுனியாவில் தேர்தல் கடமையில் 2,155 பேர் பாதுகாப்பு கடமையிலும் 1,728 அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமையிலும் ஈடுபட்டுள்ளதாக வவுனியா மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் ஐ.எம்.ஹனீபா தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

2019ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இடம்பெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலுக்குரிய வன்னி தேர்தல் மாவட்டத்திற்குரிய வவுனியா மாவட்டத்தில் தேர்தலுக்குரிய சகல பூர்வாங்க ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

இதன்அடிப்படையில், வவுனியா மாவட்டத்தில் 117,333 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில், 142 வாக்களிப்பு நிலையங்களில் உருவாக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு உருவாக்கப்பட்ட வாக்களிப்பு நிலையங்களுள் வவுனியா கிழக்கில் 21 நிலையங்களும், வவுனியாவில் 80 நிலையங்களும், வவுனியா தெற்கு 11 நிலையங்களும், வெங்கல செட்டிக்குளம் 25 நிலையங்களும், வெலிஓயா 5 நிலையங்களும் அமைக்கப்பெற்று சகல ஏற்பாடுகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளன.

அத்துடன் இந்த வாக்களிப்பு நிலையங்களுக்காக 1,728 அரச ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், அவர்கள் கடமைக்கு சென்ற வண்ணம் உள்ளனர்.

மேலும் வவுனியா மாவட்ட வாக்காளர்கள் நேரத்திற்கு வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று உங்களது வாக்குகளை மேற்கொள்ளவும். வாக்களிப்பானது நாளை காலை 7.00 மணிக்கு ஆரம்பிக்கப்பட்டு மாலை 5.00 மணிக்கு நிறைவு பெறவுள்ளது.

அவ்வாறு நிறைவு பெற்றதுடன் வாக்குப் பெட்டிகள் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு எடுத்துவரப்படுவதுடன், தபால் மூல வாக்கெண்ணும் பணிகள் நாளையதினம் மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன், ஏனைய வாக்கெண்ணும் பணிகள் மாலை 7.00 மணியிலிருந்தும் ஆரம்பிக்கப்படும்.

இதற்காக 20 வாக்கு எண்ணும் நிலையங்கள் வவுனியா மாவட்ட செயலகத்தில் உருவாக்கப்பட்டுள்ளன.

அத்துடன் இதற்காக 1871 பொலிஸ் உத்தியோகத்தர்கள், 142 அதிரடிப் படையினர், 142 சி.டி.எப் என 2,155 பேர் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.