மன்னார் மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் பூர்த்தி

Report Print Ashik in தேர்தல்

நாளை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான சகல விதமான ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

நாளை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான சகல விதமான ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. மன்னார் மாவட்டத்தில் 76 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புக்கள் இடம்பெறவுள்ளன.

மன்னார் மாவட்டச் செயலகத்தில் இருந்து ஆகக்கூடிய தூரத்தை கொண்ட வாக்களிப்பு நிலையமாக 90 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள இரணை இலுப்பைக்குளம் வாக்களிப்பு நிலையம் அமைந்துள்ளது.

மேலும் மன்னார் வடக்கு பகுதியில் வெள்ளாங்கும் வாக்களிப்பு நிலையம் 45 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ளது. தெற்கு திசையில் மருச்சிக்கட்டி வாக்களிப்பு நிலையம் 60 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ளது.

ஏனைய வாக்களிப்பு நிலையங்கள் அனைத்தும் அதற்கு உட்பட்டதாக அமைந்துள்ளது. வாக்களிப்பு நிலைய பணிகள் இடம்பெறுவதற்காக சிரேஸ்ட தலைமை தாங்கும் அலுவலகர்களை தலைமையாக கொண்டு சகல உத்தியோகஸ்தர்களும், வாக்குப் பெட்டிகளும் காலை 7.30 மணியிலிருந்து காலை 10.45 மணிக்குள் வாக்களிப்பு நிலையங்களுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

மேலும் இத்தேர்தலில் வாக்களிக்க 89,403 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். 76 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிக்க உள்ளனர்.

வாக்கு என்னும் நிலையங்கள் 8 அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான கடமைகளை மேற்கொள்ள 1690 அரச அதிகாரிகள் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் 350 பொலிஸார் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களில் 152 பேர் 76 வாக்களிப்பு நிலைங்களில் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். ஏனையவர்கள் மாவட்டச் செயலகம் மற்றும் நடமாடும் செயற்பாடுகளில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதுவரை 31 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளது. அவை பாரிய அளவில் இல்லை. அனைத்து முறைப்பாடுகளுக்கும் தீர்வுகள் காணப்பட்டுள்ளது. வாக்களிப்பு நிலையங்கள் அனைத்தும் தயார்ப்படுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் நடவடிக்கைகளுக்கு விசேட வாகன ஒழுங்குகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.101 அரச, தனியார் வாகனங்கள் இவ்வாறு பயன்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் புத்தளத்தில் உள்ள மன்னார் மாவட்ட வாக்களர்கள் 122 பேருந்துகளில் மன்னாரிற்கு வருகின்றனர்.

தேர்தல் ஆணைக்குழுவின் அனுமதியின் பெயரில் வருகின்றனர். ஆனால் குறித்த மாவட்டத்தில் அவ்வாறான ஏற்பாடுகளை நாங்கள் மேற்கொள்ளவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.