திருகோணமலை மாவட்டத்தில் பூர்த்தியடைந்துள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள்

Report Print Mubarak in தேர்தல்

நாளை இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான சகல விதமான ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் டி.டி.ஏ.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.

திருகோணமலையில் இன்று இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

08ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்புக்கான சகல விதமான ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ள நிலையில் பொலிஸ் பாதுகாப்புடன் வாக்கு பெட்டிகள் இன்று 307 வாக்களிப்பு நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

திருகோணமலை மாவட்டத்தில் இம்முறை திருகோணமலை தேர்தல் தொகுதியில் 94,781 வாக்காளர்களும், மூதூர் தேர்தல் தொகுதியில் 107,30 வாக்காளர்களும், சேருவில தேர்தல் தொகுதியில் 79,303 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

திருகோணமலையில் தேர்தல் கடமையில் 2000 அரச உத்தியோகத்தர்களும், பாதுகாப்பு கடமைகளுக்காக 4000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

திருகோணமலை மாவட்டத்தில் வாக்களிக்க தகுதியான மொத்த வாக்காளர்களும் நீதியாகவும், நேர்மையாகவும், சுதந்திரமாகவும் வாக்களிப்பதற்கு ஏதுவான சகல ஏற்பாடுகளும் செய்து முடிக்கப்பட்டுள்ளதாகவும் அத்தோடு வயோதிபர்கள் மற்றும் விசேட தேவை உடையவர்களும் வாக்களிக்க தேவையான சகல வசதிகளும் வாக்கெடுப்பு நிலையங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒவ்வொரு வாக்கெடுப்பு நிலையங்களுக்கு இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் வாக்கெண்ணும் நிலையங்களுக்கு பாதுகாப்பு கடமைக்கு இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களும் இணைக்கப்பட்டுள்ளனர். இதனை தவிர ரோந்துப்பணியில் விசேட பொலிஸ் பிரிவினர் பங்கெடுக்கவுள்ளனர், என்று குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, திருகோணமலை மாவட்ட பிரதி தேர்தல் ஆணையாளர் எஸ்.சுதாகரன் தேர்தல் பணிகள் குறித்து தெரிவிக்கையில்,

இம் மாவட்டத்தில் 2 இலட்சத்து 81 ஆயிரத்து 114 பேர்கள் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு தகுதி பெற்றுள்ளனர். விசேட தேவையுடையோர் வாக்களிப்பு நிலையங்களுக்கு செல்வதற்கான அனுமதிப்பத்திரங்களை அந்தந்த கிராம சேவகர் ஊடகப் பெற்றுக் கொள்ள முடியும்.

திருகோணமலை தொழில் நுட்பக் கல்லூரியில் அமைந்துள்ள வாக்கெண்ணும் நிலையத்தில் 21 சாதாரண வாக்கெண்ணும் நிலையத்திலும் 09 தபால் மூலம் வாக்கெண்ணும் நிலையத்திலும் வாக்குகளை எண்ணுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தபால் மூல வாக்குகள் பிற்பகல் 5.15 மணிக்கு பின்னரும் சாதாரண வாக்களிப்பு நிலையங்களில் தெரிவத்தாட்சி அதிகாரியின் அடிப்படையில் பிற்பகல் 7 மணியளவில் எண்ணுவதற்கு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

அத்தோடு வாக்களிப்பு நிலையங்களிலும், வாக்கெண்ணும் நிலையங்களிலும் பொலிஸாரின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

அசம்பாவிதங்கள் ஏற்படும் இடத்தில் விசேடஅதிரடிபடையினர் மற்றும் ஏனைய பாதுகாப்பு படை உத்தியோகத்தர்களின் சேவைகளையும் உதவிகளும் பெற்றுக்கொள்ளப்படவுள்ளது.

எதிர்பார்ப்பதைப் போன்று எதிர்வரும் 16ஆம் திகதி சகல தேர்தல் அலுவலகர் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் சாதாரண நீதியான தேர்தல் ஒன்றை நடத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது எனவும் அதற்குரிய சூழலே இங்கு காணப்படுவதாகும் பிரதி தேர்தல் ஆணையாளர் எஸ்.சுதாகரன் தெரிவித்துள்ளார்.

மேலதிக செய்திகள் - அப்துல் சலாம் யாசீம்