நேரகாலத்துடன் வாக்குகளைப் பதிவு செய்யுமாறு கோரிக்கை

Report Print Vanniyan in தேர்தல்

முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வாக்காளர்கள் அனைவரும் நாளையதினம் இடம்பெற இருக்கும் வாக்குப் பதிவுகளில், கால தாமதமின்றி நேரகாலத்துடன் சென்று தமது வாக்குகளைப் பதிவுசெய்யுமாறு முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பொன்று இன்று இடம்பெற்றிருந்தது. இதன்போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

நாளைய தினம் இடம்பெற இருக்கும் ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு, எமது மாவட்டச் செயலகம் மற்றும் தேர்தல் திணைக்களம் இணைந்து, முல்லைத்தீவு மாவட்டத்தில் பதிவுசெய்யப்பட்ட 75,381 வாக்காளர்களுக்கான வாக்களிப்பு நடவடிக்கையினை முன்னெடுக்கும் பொருட்டு 135 வாக்களிப்பு நிலையங்கள் உருவாக்கப்பட்டு அதற்கான உத்தியோகத்தர்களும் அந்தந்த இடங்களுக்கு போலிஸ் உத்தியோகத்தர்களுடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

அனைவரும் தமது இடங்களுக்கு சென்று சேர்ந்திருப்பதாக எமக்கு அறிக்கையிடப்பட்டுள்ளது.

அதேவேளை இவற்றை மேற்பார்வை செய்வதற்காக 28 வலயங்களாகப் பிரிக்கப்பட்டு, அந்த 28 வலயங்களுக்குமான உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், வாக்கெடுப்பு நிலையங்களை கண்காணிக்கின்றவர்களையும் நாங்கள் உருவாக்கியிருக்கின்றோம்.

7 வலயங்கள் உருவாக்கப்பட்டு, அதற்காக உதவித் தெரிவத்தாட்சி அலுவலர்கள் நியமிக்கப்பட்டு கடமையில் நிறுத்தப்பட்டிருக்கின்றனர்.

அத்தோடு 09 வாக்கெண்ணும் நிலையங்கள் மாவட்ட செயலக வளாகத்தில் உருவாக்கப்பட்டிருக்கின்றன.

பிரதான வாக்கெண்ணும் அலுவலர்களும் எமது மாவட்டத்திலிருந்தும் மற்றும் பிற மாவட்டங்களிலிருந்தும் பணிகளில் ஈடுபடுவதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாளைய தினம் நடைபெற இருக்கின்ற தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் எமது மாவட்டச் செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

எமது மாவட்டத்திலுள்ள வாக்காளர்கள் நாளையதினம் இடம்பெற இருக்கும் வாக்குப் பதிவுகளில் கால தாமதமின்றி நேரகாலத்துடன் சென்று தமது வாக்குகளைப் பதிவுசெய்யுமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் நீதியானதும் நேர்மையானதுமான தேர்தல் நடைபெறுவதற்கு ஏற்றவிதத்தில், தேர்தல் நடவடிக்கைகளை எங்களுடைய மாவட்டத்தில் போலிஸ் உத்தியோகத்தர்களுடன் இணைந்து செயற்படுத்தி வருகின்றோம்.

இதுவரையில் எமது மாவட்டத்தில், தேர்தல் வன்முறைச் சம்பவங்களுடன் தொடர்புடைய 15 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. எனினும் அவை பாரதூரமான முறைப்பாடுகளாக அமையவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.