இம்முறை சமூக வலைத்தளங்கள் ஊடான வன்முறைகளே அதிகரிப்பு!

Report Print Murali Murali in தேர்தல்

நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் இம்முறை சமூக வலைத்தளங்கள் ஊடான வன்முறைகளே அதிகமாக பதிவாகியிருப்பதாக தேசிய தேர்தல் கண்காணிப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

1982ம் ஆண்டிலிருந்து நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல்களை விடவும் வன்முறைச் சம்பவங்கள் குறைவாக பதிவாகிய தேர்தல் இது என்ற போதிலும், சமூக வலைத்தளங்கள் ஊடான சட்டங்களை மீறிய அதிகமான முறைப்பாடுகள் பதிவாகியிருப்பதாகவும் அந்த நிலையம் கூறுகின்றது.

07வது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியைத் தெரிவுசெய்கின்ற 08வது =ஜனாதிபதி தேர்தல் நாளை சனிக்கிழமை நடைபெறவுள்ளது.

அந்த வகையில் பல்வேறு வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு தேர்தல் கண்காணிப்பு முகவர் அமைப்புக்கள் களத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில் இலங்கையில் இயங்கும் தேசிய தேர்தல் கண்காணிப்பு மத்திய நிலையம் கொழும்பில் இன்றைய தினம் ஊடக சந்திப்பை நடத்தி, தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் பற்றிய தகவல்களை வெளியிட்டது.

“இம்முறை ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக 716 முறைப்பாடுகள் இதுவரை கிடைத்துள்ளன.

அவற்றில் தேர்தல் சட்டங்கள் மீறியமை, அரச சொத்துக்கள் முறைகேட்டுப்பாவனை குறித்து 230 முறைப்பாடுகளும், வன்முறைச் சம்பவங்களாக 36 முறைப்பாடுகளும், சமூக வலைத்தளங்கள் ஊடாக பொய்யான பிரசாரங்கள் குறித்து 70 முறைப்பாடுகளும், கைதுகளாக 80 சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

1982ஆம் ஆண்டு இடம்பெற்ற முதலாவது ஜனாதிபதி தேர்தலில் இருந்து வன்முறைச் சம்பவங்கள் குறைவாக இடம்பெற்ற முதலாவது தேர்தலாக இம்முறை நடைபெறும் ஜனாதிபதி தேர்தலைக் குறிப்பிடலாம்.

88களில் இடம்பெற்ற தேர்தலில் 270 வாக்குச் சாவடிகளில் வாக்களிக்க முடியாத நிலை ஏற்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் அதிகாரிகள் படுகொலை செய்யப்பட்டனர். அதன் பின்னரான தேர்தலிலும் கள்ள வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன.

இம்முறை அமைதியான முறையை காணமுடிகிறது. எனினும் இம்முறை தேர்தலில் மௌனக் காலத்தில் சமூக வலைத்தளங்களில் பிரசாரங்கள் இன்னும் இடம்பெறுவதை அவதானிக்க முடிகிறது.

அதேபோல வேட்பு மனுக் கொடுத்து ஏற்றுக்கொள்ளப்பட்ட அனைவருமே தேர்தலில் போட்டியிட தகுதி பெற்றவர்கள் என்ற படியினால் மக்கள் சரியான வேட்பாளர்களைத் தெரிவுசெய்வதற்கு சுதந்திரம் பெற்றவர்களாக கருதப்படுகின்றனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.