ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்பு ஆரம்பம்

Report Print Manju in தேர்தல்

இலங்கை ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.

இந்நிலையில், வாக்களிப்பு நிலையத்துக்கு செல்லும்போது வாக்காளர்கள் தொலைபேசி மற்றும் கைப்பைகள் ஆகியவற்றை கொண்டு செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது.

அம்பாறை...

இன்றைய தினம் இடம்பெற்று வருகின்ற ஜனாதிபதி தேர்தலில் அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மற்றும் காரைதீவு தமிழ் பிரதேசங்களில் வாக்களிப்பு நடவடிக்கை மந்த கதியில் இடம்பெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு...

இலங்கையில் இன்று ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு ஆரம்பமாகியுள்ள நிலையில், முல்லைத்தீவிலும் மக்கள் வாக்களிப்பதற்கு, வாக்களிப்பு நிலையங்களுக்கு வருகைத்தந்துள்ளனர்.

காலை 7 மணிக்கு வாக்களிப்பு ஆரம்பமாகியது. எனினும், 6.30 மணி முதல் மக்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு வருகைத்தந்திருந்ததாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை மாவட்டத்தில் 135 வாக்கெடுப்பு நிலையங்களிலும் வாக்கு பதிவுகளை மேற்கொள்ளமுடியும் என மாவட்ட தேர்தல் அலுவலகத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் பொதுமக்கள் தமதுவ வீடுகளில் இருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். முல்லைத்தீவில் இம்முறை 75.381 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தகவல் - யது

வவுனியா...

வவுனியாவில் தற்போது அமைதியான முறையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

வவுனியா மாவட்டத்தில் அமைந்துள்ள 142 வாக்களிப்பு நிலையங்களிலும் காலை 7 மணிக்கு வாக்கு பதிவுகள் ஆரம்பமாகியுள்ளன.

அந்தவகையில், வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்தில் காலை 7 மணிக்கு முதலாவது நபராக நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் சென்று தனது வாக்கினை அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

செய்தி - தீசன்

திருகோணமலை...

திருகோணமலை மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 307 வாக்களிப்பு நிலையங்களில் தற்போது வாக்குப் பதிவுகள் இடம்பெற்று வருகின்றன.

அந்தவகையில், வாக்களிப்பு நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதோடு பொலிஸார் மற்றும் விசேட பொலிஸ் அதிரடிப்படையினர் தமது கடமைகளை மேற்கொண்டுள்ளனர்.

செய்தி - முபாரக், அப்துல் சலாம் யாசிம்

மலையகம்

மலையகத்தை பொருத்தவரை பெருந்தோட்ட மக்கள் உட்பட அனைவரும் வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று தங்களுடைய வாக்குகளை பயன்படுத்துவதை காணக்கூடியதாக இருக்கின்றது.

பாதுகாப்பு பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளதுடன், உள்நாட்டு வெளிநாட்டு சர்வதேச கண்காணிப்பாளர்களும் தங்களது பார்வையை செலுத்திவருகின்றனர்.

நுவரெலியா மாவட்டத்தை பொறுத்தமட்டில் 569,028 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

அந்தவகையில் நுவரெலியா மஸ்கெலியா தேர்தல் தொகுதியில் 325,030 வாக்காளர்களும், கொத்மலை தேர்தல் தொகுதியில் 83,018 வாக்காளர்களும், வலப்பனை தேர்தல் தொகுதியில் 86,644 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதோடு ஹங்குராங்கெத்த தேர்தல் தொகுதியில் 74,336 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.

நுவரெலியா மாவட்டத்தில் 488 வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா – மஸ்கெலியா தொகுதியில் 256 வாக்குசாவடிகளும், கொத்மலை தொகுதியில் 81 வாக்குசாவடிகளும், வலப்பனைதொகுதியில் மூன்று இடங்களில் இரட்டை வாக்கு சாவடிகள் உட்பட 76 வாக்கு சாவடிகளும், ஹங்குராங்கெத்த தொகுதியில் 75 வாக்கு சாவடிகளும்அமைக்கப்பட்டுள்ளன.மேலும் 48 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த வாக்குகளை எண்ணுவதற்காக நுவரெலியா காமினி தேசிய கல்லூரியில் 39 வாக்கு எண்ணும் நிலையங்களும், நுவரெலியா மாவட்ட செயலகத்தில் தபால் வாக்குகள் எண்ணுவதற்காக 9 வாக்கு எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்களிப்பு நிலையங்களில் 6800 பேர் கடமையில் ஈடுபட்டுள்ளதோடு, பாதுகாப்புக்காக பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொலிஸாரும் 1590 பேர் கடமையில்ஈடுப்பட்டுள்ளனர்.

அதேபோல் மத்திய மாகாணத்தில் கண்டி, மாத்தளை போன்ற பகுதிகளிலும் ஊவா மாகாணத்தில் பதுளை, பண்டாரவளை ஆகிய பகுதிகளிலும் வாக்களிப்பு மிகவும் நீதியாகவும் சுதந்திரமான முறையிலும் நடைபெற்று வருவதாக தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் தெரிவிக்கின்றன.

தகவல்- திருமால்

மட்டக்களப்பு

அமைதியான முறையில் வாக்களிப்பு நடவடிக்கைகள்முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. மக்கள் பெருமளவில் ஆர்வத்துடன் வாக்களிப்பில் ஈடுபட்டுவருகின்றனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்குடா, மட்டக்களப்பு, பட்டிருப்பு ஆகிய தேர்தல் தொகுதிகளில் 428 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டு வாக்களிப்பு நடவடிக்கைகள்முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மூன்று தேர்தல் தொகுதிகளிலும் மொத்தமாக 3 இலட்சத்து 98 ஆயிரத்து 301 (3,98,301) வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

தேர்தல் கடமைகளில் 4991 அதிகாரிகள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன் பாதுகாப்பு கடமைகளுக்காக 1688 பொலீஸ் உத்தியோகத்தர்கள்,320 சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மைக்கேல் கல்லூரி வாக்களிப்பு நிலையத்தில் மட்டக்களப்பு மறை மாவட்ட ஆயர் ஜோசப் பொன்னையா ஆண்டகை தலைமையிலான மதகுருமார்கள் வாக்களித்ததுடன் அனைவரும்தமது கடமையினை செய்ய வேண்டும் என ஆயர் வேண்டுகோள் விடுத்தார்.

இதேபோன்று இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம் மட்டக்களப்பு சிசிலிய பெண்கள் தேசிய பாடசாலையில் தனது வாக்கினை பதிவு செய்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தாண்டவன்வெளி ஜோசப்வாஸ் வித்தியாலயத்தில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள கல்குடா தேர்தல் தொகுதியில் காலை 7 மணிமுதல் 11 மணிவரையில் 22.49 வாக்களிப்பும், மட்டக்களப்பு தேர்தல் தொகுதியில் 22.01 வீத வாக்களிப்பும், பட்டிருப்பு தேர்தல் தொகுதியில் 23. வாக்களிப்பும் இடம்பெற்றுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான மாணிக்கம் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

தகவல் - குமார், ருசாத்

கிளிநொச்சி

கிளிநொச்சி மாவட்டத்தில் 89538 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ள நிலையில் 100 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்புக்கள் இடம்பெற்று வருகின்றது.

இன்று காலை 9 மணிவரை 20 வீத வாக்களிப்புகள் இடம்பெற்றுள்ளதாக கிளிநாச்சி தேர்வத்தாட்சி அலுவலர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவிக்கின்றார்.

இதுவரை எவ்வித அசம்பாவிதங்களும் இடம்பெறாத நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தில் தேர்தல் சுமுகமாகவும், அமைதியாகவும் இடம்பெற்று வருகின்றது.

தகவல்- சுமன்

மன்னார்

மன்னாரில் மக்கள் ஆர்வத்துடன் வாக்களிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு, மடு ஆகிய 5 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் உள்ள 76 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம் பெற்று வருகின்றது.

வாக்களிப்பு நிலையங்களுக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதோடு, தேர்தல் கண்காணிப்பு குழுக்களும்அடிக்கடி விஜயம் செய்து அவதானித்து வருகின்றனர்.

மன்னார் தாராபுரம் வாக்களிப்பு நிலையத்தில் அமைச்சர் றிஸாட் பதியுதீன் காலை 10.45 மணியளவில் வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தகவல்- ஆசிக்