ஜனாதிபதி தேர்தல் 2019 – வாக்குப் பதிவுகள் நிறைவு!

Report Print Tamilini in தேர்தல்

ஏழாவது ஜனாதிபதியை தெரிவு செய்யும் எட்டாவது ஜனாதிபதி தேர்தலின் வாக்குப் பதிவுகள் 5 மணியுடன் நிறைவடைந்துள்ளது.

காலை 7 மணியிலிருந்து நடைபெற்ற வாக்குப் பதிவுகள் 5 மணியுடன் நிறைவடைந்ததுடன், நாடு தழுவிய ரீதியில் 80 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

வழமையான தேர்தல்களில் மாலை 4 மணியுடன் தேர்தல் வாக்களிப்பு நிறைவு பெறும். எனினும் இம்முறை நீண்ட வாக்குச்சீட்டினை கொண்டிருந்தமையிலான மேலதிகமாக ஒரு மணித்தியாலம் அதிகரிக்கப்பட்டிருந்தது.

தற்போது வாக்குப் பெட்டிகள் சீல் செய்யப்பட்டு வாக்கு எண்ணும் மத்திய நிலையங்களுக்கு கொண்டு செல்லும் பணிகளில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

இந்தமுறை வாக்களிப்பதற்காக 15,992,096 வாக்காளர்கள் தகுதி பெற்றிருந்தனர்.

இவர்களுக்காக 12,845 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

வாக்களிப்பின்போது 68ஆயிரம் காவல்துறையினர் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.

இந்தநிலையில் வாக்குகள் 1550 வாக்கு எண்ணும் நிலையங்களில் எண்ணப்படவுள்ளன. இதில் 371 அஞ்சல் மூல வாக்கு எண்ணும் நிலையங்களும் அடங்குகின்றன.

இதற்கிடையில் மாலை 4.30 வரையான காலப்பகுதியில் காலியில் 80 வீதம், கண்டியில் 75வீதம், மாத்தறையில் 77வீதம், திருகோணமலையில் 82வீதம், யாழ்ப்பாணத்தில் 64வீதம், கிளிநொச்சியில் 70வீதம், குருநாகலில் 70வீதம், பொலநறுவையில் 80வீதம், கேகாலையில் 73வீதம், இரத்தினபுரியில் 80வீதம் முல்லைத்தீவில் 72வீதம் மன்னாரில் 68வீதம் புத்தளத்தில் 72வீதம் மாத்தளையில் 75வீதம், நுவரெலியாவில் 75வீதம், வவுனியாவில் 72 வீதம் என்ற அளவில் வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது 81.52 சதவீதமான வாக்காளர்கள் வாக்களித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனாதிபதி தேர்தலின் முதலாவது உத்தியோகபூர்வ நள்ளிரவு 12 மணியின் பின்னர் வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அறிவித்துள்ளார்.