வவுனியா
ஜனாதிபதி தேர்தலில் வவுனியாவில் 75.12 வீதம் வாக்குகளும், வன்னி தேர்தல் தொகுதியில் 74.34 வீதமான வாக்குகளும் பதிவாகியுள்ளதாக மாவட்ட வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் எம்.ஹனீபா தெரிவித்துள்ளார்.
வாக்களிப்பு தொடர்பாக அவரது அலுவலகத்தில் இன்று மாலை இடம்பெற்ற ஊடகச் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
இதேவேளை இன்று மாலை வரை சிறியளவிலான 63 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளன. வாக்கு சாவடிகளிலிருந்து மாவட்ட செயலகத்திற்கு வாக்குபெட்டிகள் எடுத்து வரப்பட்டுள்ளது.
இதேவேளை மாலை 5 மணியிலிருந்து தபால் வாக்குகளும், ஏனைய வாக்குகள் மாலை 7 மணியிலிருந்தும் எண்ணப்படும். இதற்காக வவுனியா மாவட்ட செயலக வளாகத்தில் 20 வாக்குகள் எண்ணும் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தேர்தல் கடமைகளிற்காக வவுனியா மாவட்டத்தில்1,728 அரச ஊழியர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என அவர் கூறியுள்ளார்.
கிளிநொச்சி
இன்றைய தினம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்களிப்பானது அமைதியாகவும், நீதியாகவும் இடம்பெற்றதாக கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.
தேர்தல் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். மேலும் அவர்,
கிளிநொச்சி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 83,531 வாக்காளர்களில் 73 வீதத்தினர் வாக்களித்துள்ளனர்.
தற்பொழுது வாக்குப்பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களிலிருந்து ஏழு வாக்கெண்ணும் நிலையங்களுக்கு கொண்டு வரப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
அத்துடன் கிளிநொச்சி மாவட்டத்தில் 100 வாக்களிப்பு நிலையங்களிலிருந்து வாக்குப்பெட்டிகள் கிளிநொச்சி மாவட்டச் செயலக வளாகத்திற்கு எடுத்துவரப்படுகின்றன.
ஏழு வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
செய்தி - நிபோஜன்
மட்டக்களப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் 77 வீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம்.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
08ஆவது ஜனாதிபதியை தெரிவுசெய்யும் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிக்கும் பணிகள் மட்டக்களப்பு மாவட்டத்தின் 428 வாக்களிப்பு நிலையங்களில் இன்று காலை முதல் மாலை 05 மணி வரையில் நடைபெற்றது.
மிகவும் சுமுகமான முறையில் நடைபெற்ற இந்த வாக்கெடுப்பில் மக்கள் மிகவும் ஆர்வத்துடன் வாக்களித்திருந்தனர்.
இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் மூன்று தேர்தல் தொகுதிகளிலும் மொத்தமாக 3 இலட்சத்து 98 ஆயிரத்து 301 வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.
இன்று மாலை வாக்களிப்பு நடவடிக்கைகள் பூர்த்தியடைந்ததும் மட்டக்களப்பு மாவட்டத்தின் தேர்தல் மத்திய நிலையமாக செயற்படும் மட்டக்களப்பு இந்துக் கல்லூரிக்கு வாக்குப்பெட்டிகள் கொண்டு வரப்பட்டன.
செய்தி - குமார்
மன்னார்
மன்னார் மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் 71.7 வீதமான வாக்களிப்பு இடம்பெற்றுள்ளதாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ் தெரிவித்துள்ளார்.
மன்னார் மாவட்டச் செயலகத்தில் இன்று மாலை 6 மணியளவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
வாக்கு என்னும் நடவடிக்கை இரவு 8 மணிக்கு பின்னர் காலதாமதமாக ஆரம்பிக்கப்படலாம். சில இடங்களில் மழை பெய்வதினால் இன்னும் வாக்குப்பெட்டிகள் மாவட்டச் செயலகத்தை வந்தடையவில்லை.
எவ்வித பிரச்சினைகளும் இன்றி சுமூகமான முறையில் வாக்களிப்புக்கள் மன்னார் மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
காலையில் வேகமாக வாக்களிப்பு இடம்பெற்ற போதும் பிற்பகல் மந்த கதியில் இடம்பெற்றது. அதன் காரணமாக மன்னார் மாவட்டத்தில் 71.7 வீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
நாளை அதிகாலை 2 மணிக்கு முன்னர் மன்னார் மாவட்ட தேர்தல் நிலவரம் அறிவிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

செய்தி - ஆசிக்