மன்னாரில் வாக்களித்து விட்டு புத்தளம் நோக்கி சென்று கொண்டிருந்த பயணிகள் பேருந்து மீது மதவாச்சி பகுதியில் இன்று சனிக்கிழமை மாலை தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
நேற்று வெள்ளிக்கிழமை இரவு புத்தளத்தில் இருந்து மன்னார் நோக்கி வருகை தந்த அரச பேருந்துகள் மீது ஓயா மடு பகுதியில் வைத்து துப்பாக்கி பிரயோகம் மற்றும் கல்வீசித் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
எனினும் அரசு பேருந்துகளுக்கு பாதிப்பு ஏற்பட்ட போதும் மக்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை.
இந்நிலையில் இன்றைய தினம் அந்த மக்கள் வாக்களித்து விட்டு மீண்டும் அரச பேருந்துகளில் மதவாச்சி ஊடாக புத்தளம் சென்று கொண்டிருந்த போது இன்று மாலை சுமார் 6 மணியளவில் மதவாச்சி பகுதியில் வைத்து இனம் தெரியாத நபர்களினால் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த கல் வீச்சுத் தாக்குதலின் போது அப்பேருந்தில் பயணித்த சில பயணிகள் காயமடைந்த நிலையில் மதவாச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலுக்கு உள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களையும், சம்பவம் இடம்பெற்ற இடத்தையும் அமைச்சர் றிஸாட் பதியூதீன் நேரடியாகச் சென்றுபார்வையிட்டார்.
குறித்த தாக்குதல் தொடர்பில் மதவாச்சி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.