திருகோணமலை மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் யாவும் நாளை

Report Print Mubarak in தேர்தல்

திருகோணமலை மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் யாவும் நாளை (17)காலை வெளியிடப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 7வது ஜனாதிபதியை தெரிவு செய்கின்ற தேர்தலானது இன்று காலை 7.00 மணியளவில் இருந்து மாலை 5.00 மணி வரை நடைபெற்றது.

வாக்குப் பதிவிற்காக அமைக்கப்பட்டுள்ள 307 வாக்களிப்பு நிலையங்களில் இருந்து வாக்குப்பெட்டிகள் யாவும் திருகோணமலை மிகிந்தபுர தொழில்நுட்ப கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கெண்ணும் நிலையத்திற்கு கொண்டு செல்கின்ற பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் இம்முறை திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் 83% வாக்குகள் பதிவிடப்பட்டுள்ளது.

மேலும் பாதுகாப்புக் கடமைகளுக்காக 2000 காவல்துறையினர் பணியில் அமர்த்தப்பட்டுள்ளதுடன் வன்முறைச்சம்பவங்கள் இடம்பெறக்கூடும் என அனுமானிக்கப்படும் பகுதிகளில் விசேட அதிரடிப்படையினரது பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளதை அவதானிக்கமுடிகிறது.

வாக்களிக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் இன்று மாலை 5.00 மணியளவில் நிறைவுக்குக் கொண்டுவரப்பட்ட நிலையில் திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் 55 தேர்தல் வன்முறைகள் சம்பந்தமான முறைப்பாடுகள் இதுவரை பதிவாகியுள்ளதாக மாவட்ட அரச அதிபர் என்.ஏ.ஏ. புஸ்பகுமார தெரிவித்தார்.

தபால் மூல வாக்கெண்ணும் நடவடிக்கைகள் இன்று மாலை 5.30 மணியளவில் 9 தபால் மூல வாக்கெண்ணும் நிலையங்களில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதோடு ஏனைய வாக்குகளை எண்ணும் நடவடிக்கைகள் அதற்காக அமைக்கப்பட்டுள்ள 21 வாக்கெண்ணும் நிலையங்களில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் திருகோணமலை மாவட்டத்திற்கான தேர்தல் முடிவுகள் யாவும் நாளை (17)காலை வெளியிடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.