கோத்தபாயவின் வெற்றி இந்தியாவிற்கு பேராபத்து! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

Report Print S.P. Thas S.P. Thas in தேர்தல்

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராஜபக்ச வெற்றி பெற்று பதவிக்கு வருவதானது ஈழத் தமிழர்களுக்கு மட்டுமல்லாது இந்தியாவிற்கும் பேராபத்தை விளைவிக்கும் என தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கை ஜனாதிபதி தேர்தல்கள் முடிவடைந்து முடிவுகள் வெளியாகியிருக்கும நிலையில் கோத்தபாய ராஜபக்சவிற்கு பல்வேறு தலைவர்களும் வாழ்த்துக்களைத் தெரிவித்துவருகின்றனர்.

எனினும் தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முன்னரே இந்தியாவிலிருந்து பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி கோத்தபாயவிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்திருந்தார்.

அதேவேளை, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக வாக்களித்த மக்களுக்கு நன்றிகளைத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் தற்போது அறிக்கை வெளியிட்டு தன்னுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

“ இலங்கை ஜனாதிபதி தேர்தலில் கோத்தபாய ராசபட்சே வெற்றி பெற்று இருப்பது ஈழத்தமிழருக்கு எதிரான ஒடுக்குமுறைகள் அதிகரிக்கும் என்பதோடு இந்தியாவிற்கும் பேராபத்தை விளைவிக்கும்.

சீனாவுடன் இலங்கை கொண்டுள்ள நட்புறவு மேலும் பெருகும். 2009 ஆம் ஆண்டு இலங்கையில் ஒன்றரை இலட்சத்திற்கு மேற்பட்ட ஈழத்தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு கோத்தபாய ராஜபக்சவும் முக்கிய பொறுப்பாவார். அவருடைய வெற்றி ஈழத்தமிழர்களுக்கு மேலும் மேலும் அழிவையும் நெருக்கடியையும் உருவாக்கும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.