விளம்பரத்திற்காக அதிகம் செலவிட்ட பொதுஜன பெரமுன: தேர்தல் கண்காணிப்பாளர்கள்

Report Print Ajith Ajith in தேர்தல்

ஏனைய பிரசாரங்களை காட்டிலும் பொதுஜன பெரமுன ஜனாதிபதி தேர்தலின் போது இணைய விளம்பரங்களுக்கு அதிகமாக செலவிட்டுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒன்றியத்தின் ஆரம்ப அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது நிதி ஒழுங்கமைப்பு இருக்கவில்லை என்று ஒன்றியம் தெரிவித்துள்ளது.

அரசியல் கட்சியின் பிரசாரத்தின்போது நிதியளிப்பு ஒழுங்கமைக்கப்பட்டிருக்கவில்லை. செலவீனங்களுக்கும், நிதிப்பங்களிப்புகளுக்கும் வரையறை இருக்கவில்லை. வேட்பாளர்கள் தமது சொத்து விபரங்களை வெளியிடுமாறு மாத்திரம் கேட்கப்பட்டனர். எனினும், அவர்களின் பிரசாரங்களுக்கு நிதித்தடைகள் விதிக்கப்பட்டிருக்கவில்லை.

பிரதான இரண்டு வேட்பாளர்களின் பிரசாரங்களுக்கும் இடையில் நிதி செலவீட்டில் பாரிய வித்தியாசங்கள் இருந்தன.

பொதுஜன பெரமுன தமது இணைய பிரசாரங்களின்போது ஐந்து செயலிகளை பயன்படுத்தியிருந்தது. இந்தநிலையில் கூகுள் விளம்பரங்கள் உட்பட்ட 500 விளம்பரங்கள் வரை இணையங்களில் காட்சிப்படுத்தப்பட்டன.

இவற்றை நோக்கும்போது சர்வதேச நியமங்களின்படி பொதுஜன பெரமுனவின் பிரசாரங்களின்போது நிதி வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் என்பன இடம்பெற்றிருக்கவில்லை என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.