நாடாளுமன்றத்தை கலைக்க வேண்டும் - ஜீ.எல்.பீரிஸ்

Report Print Steephen Steephen in தேர்தல்

நடப்பு நாடாளுமன்றத்தை கலைத்து விட்டு பொதுத் தேர்தலை நடத்தி மக்கள் விரும்பும் நாடாளுமன்றத்தை தெரிவு செய்ய சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுப்பது அனைவரதும் ஜனநாயக கடமை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தவிசாளர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

நடந்து முடிந்த தேர்தல் பொதுத் தேர்தலாக இருந்திருக்குமாயின் தெளிவான பெரும்பான்மை கிடைத்திருக்கும். நாடாளுமன்றத்தில் 120க்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களை பெற்று மிகப் பெரிய வெற்றியை பெற்றிருக்க முடியும். அப்போது நாடாளுமன்றத்தின் முழு அதிகாரமும் எமக்கு கிடைத்திருக்கும்.

எனினும் தற்போதைய நிலைமையில் அனைவரும் இணைந்து பொது இணக்கத்தின் மூலம் நாடாளுமன்றத்தை கலைத்து பொதுத் தேர்தலை நடத்தி நாட்டு மக்களுக்கு சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுப்பதே ஜனநாயக வழிமுறையாக இருக்கும். அப்போது தாம் விரும்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய புதிய நாடாளுமன்றத்தை மக்களால் தெரிவு செய்ய முடியும்.

மக்களின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. அவர்கள், கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக தெரிவு செய்துள்ளனர். அவரது தேர்தல் அறிக்கைக்கு அனுமதி வழங்கியுள்ளனர். அதனை அமுல்படுத்த மிகப் பெரிய ஆணையை வழங்கியுள்ளனர். இந்த செயற்பாட்டை முழுமைப்படுத்த நாடாளுமன்றத்தில் தெளிவான பெரும்பான்மை அவசியம்.

கொள்கைகளை அமுல்படுத்துவதற்காக சட்டமூலங்களை முன்வைக்கவும் அவற்றை நிறைவேற்றவும் வேண்டும். கொள்கை ரீதியான தீர்மானங்களை எடுப்பதற்கான பங்களிப்புக்கு கூடியளவிலான அனுமதி கிடைத்துள்ளது. இதனை முழுமைப்படுத்த நாடாளுமன்றத்தின் நேரடியான பங்களிப்பு அவசியம் எனவும் ஜீ.எல்.பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers