ஜனாதிபதி தேர்தல் தினத்திற்கு முன்னர் பாரதூரமான தேர்தல் முறைகேடுகள் இடம்பெற்றன! பேராசிரியர் ரட்னஜீவன்

Report Print Kamel Kamel in தேர்தல்

ஜனாதிபதி தேர்தல் நடைபெற்ற தினத்திற்கு முன்னரான காலப் பகுதியில் பாரதூரமான தேர்தல் முறைகேடுகள் இடம்பெற்றதாக தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்னஜீவன் ஹுல் குற்றம் சுமத்தியுள்ளார்.

பி.பி.சீ சிங்கள சேவைக்கு அளித்த நேர்காணலில் அவர் இந்த பாரதூரமான குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.

கடந்த 16ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக இவ்வாறு தேர்தலுடன் தொடர்புடைய மோசடிகள் இடம்பெற்றதாகக் குறிப்பிட்டுள்ளார்.

முஸ்லிம் மக்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் காரணமாக பெரும் எண்ணிக்கையிலானவர்கள் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் குடியுரிமை தொடர்பில் உரிய முறையில் பரிசீலனை செய்யப்படவில்லை என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.

இரட்டைக் குடியுரிமை தொடர்பில் பரிசீலனை செய்வதற்கு பதிலாக இந்த விவகாரத்தில் உள்ள ஒரே பிரச்சினை தாம் என கோட்டாபய தரப்பினருக்கு தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கூறியதாகவும் இதனால் தமது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தியுள்ளதாகவும் பேராசிரியர் ஹுல் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் தாம் இதுவரையில் பார்த்த நீதியானதும், சுதந்திரமானதுமான தேர்தல் என்ற போதிலும் உண்மையில் அது சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தல் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

1. தேர்தலில் கோட்டாபயவின் வெற்றி நிச்சயம் என்பதனால் முஸ்லிம்கள் வாக்களித்து அந்த வெற்றியில் பங்களார்களாக மாற வேண்டுமென அவரது சட்டத்தரணி அல் சாப்ரீ கோரியமை

2. சட்டத்தரணி அலி சாப்ரீக்கு எதிராக தேர்தல் ஆணைக்குழு சட்ட நடவடிக்கை எடுக்காமை

3. முஸ்லிம் மக்களை ஒடுக்க வேண்டும் எனவும் அதற்கு சரியான நபர் கோட்டாபய எனவும் கருணா அம்மான் கூறியமை

4. இவ்வாறான காரணிகளினால் முஸ்லிம்கள் தங்களது வாக்குகளை அளிக்காமை

போன்ற காரணிகள் தேர்தலுக்கு முன்னதாக இடம்பெற்ற தேர்தல் மோசடிகளுக்கான உதாரணங்களாக கருதப்பட முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை வாழ் மக்கள் இனவாத அடிப்படையிலானவர்கள் என்பது தேர்தல் முடிவுகள் மூலம் புலனாகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, பேராசிரியர் ரட்னஜீவன் ஹுல் சுமத்திய இந்தக் குற்ற்சாட்டுக்கள் குறித்த உண்மைத்தன்மையை வரலாறு தீர்மானிக்கும் என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இந்தக் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்கும் வகையில் தெரிவித்துள்ளார்.

பேராசிரியர் ஹுல் என்பவர் யார் என்பதனை இந்த நாட்டு மக்கள் அனைவரும் அறிவார்கள் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.