தேர்தல் சட்டங்களை மீறிய சம்பவங்களுக்கு எதிராக வழக்கு! பெப்ரல் அமைப்பு கோரிக்கை

Report Print Murali Murali in தேர்தல்

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது இடம்பெற்ற தேர்தல் சட்டங்களை மீறிய சம்பவங்களுக்கு எதிராக வழக்கு தொடரவேண்டும் என்கிற கோரிக்கையை தேர்தல் கண்காணிப்பு அமைப்புக்களில் ஒன்றான பெப்ரல் அமைப்பு, தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் மகிந்த தேசப்பிரியவிடம் முன்வைத்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவரை இன்றைய தினம் சந்தித்த போதே இந்த கோரிக்கையை முன்வைத்ததாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹண ஹெட்டியாராச்சி தெரிவித்தார்.

பொதுத் தேர்தல் ஏப்ரல் மாதம் நடத்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்ற நிலையில், தேர்தல்கள் ஆணைக்குழுவில் இன்று முற்பகல் விஷேட கலந்துரையாடல் நடைபெற்றது.

இதில் கலந்துகொள்ள அனைத்து அரசியற் கட்சிகளின் செயலாளர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். இந்த சந்திப்பில் கலந்துகொண்டிருந்த பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹண ஹெட்டியாராச்சி கொழும்பில் இன்று மாலை ஊடக சந்திப்பை நடத்தினார்.

இதில் கலந்துகொண்டு பேசிய அவர்,

“இன்றைய தினம் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவருக்கும், கட்சிகளின் செயலாளர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றது. எமக்கு கிடைத்த முறைப்பாடுகளை வைத்து அவற்றுக்கு எதிராக வழக்கு தொடர்வது குறித்து ஆராய்ந்தோம்.

அவற்றில் சில முறைப்பாடுகளை சட்டரீதியாக பார்க்கும்போது நீதிமன்றில் அவற்றை நிரூபணப்படுத்தும் வகையிலான ஆதாரங்கள் இல்லை.

ஆகவே இன்று நடைபெற்ற சந்திப்பின்போது கடந்த தேர்தல் காலத்தில் அரச சொத்துக்கள் முறைகேடாகப் பயன்படுத்தியமை மற்றும் அரச அதிகாரத்தைப் பயன்படுத்தியமை போன்ற தேர்தல் சட்டங்களை மீறும் சம்பவங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கும்படி எழுத்துமூலம் கோரிக்கை விடுத்திருந்தோம்.

அதேபோல, வழக்கு தொடர்வதற்கு போதுமான தகவல்கள் இல்லாதபட்சத்தில் அவற்றையும் வழங்குவதற்கு தயாராக இருக்கின்றோம் என்பதையும் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவருக்கு தெரியப்படுத்தினோம்.

தேர்தல் கண்காணிப்பு பிரிவுகள் என்றபடி அடிப்படைத் தகவல்களைத் திரட்டி அதிகாரிகளுக்கு வழங்கமுடியும். அதற்கமைய அவற்றின் சாட்சியங்களை தயார்படுத்தும் பொறுப்பு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கே உள்ளது.

எனவே வழக்கு தொடர்வதற்கு ஏதுவான தகவல்கள் எம்மிடம் இல்லை என்பதால் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் அவற்றை ஒப்படைத்துள்ளோம். கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலின்போது இப்படியான தகவல்களைத் திரட்டிக்கொள்ள தகவல் அறியும் உரிமை சட்டம் ஊடாக முடிந்தது” என அவர் கூறியுள்ளார்.