வன்னி மாவட்ட இந்து மக்கள் சார்பாக நாடாளுமன்ற தேர்தலில் சுயேட்சை குழு போட்டி

Report Print Ashik in தேர்தல்

எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலின் போது மன்னார் மாவட்டத்தில் இந்து மக்கள் சார்பாக சுயேட்சை குழு ஒன்று போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட இந்து குருக்கள் பேரவையின் தலைவர் சிவ ஸ்ரீ மஹா தர்ம குமார குருக்கள் தெரிவித்துள்ளார்.

மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் ஏற்பாட்டில் இன்று இந்து குருமார் பேரவையின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்கால அரசியல் நிலவரம் தொடர்பாக இந்து மக்களை அழைத்து ஆராய்ந்த போது மக்கள் சில ஆணைகளை எமக்கு வழங்கி உள்ளனர்.

எதிர்வரும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களை உள்ளடக்கிய வன்னி தேர்தல் தொகுதியில் இந்து மக்கள் சுயேட்சைக் குழுவாக போட்டியிட உள்ளோம்.

மக்களும் இக்கருத்தையே முன் வைக்கின்றனர். ஏன் நாங்கள் சுயேட்சையாக போட்டியிட வேண்டும் என்ற கேள்வி எல்லோருக்கும் உள்ளது.

கடந்த இரண்டு நாடாளுமன்ற பொதுத் தேர்தலிலும், நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிடம் மன்னார் மாவட்டத்தில் எங்களுக்கு ஒரு பிரதிநிதியை கேட்டிருந்தோம். ஆனால் அது கைகூடாமல் போய் விட்டது.

இந்த முறையும் நாங்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பீடங்களுடன் இவ்விடயம் தொடர்பாக பேசிய போதும் அவர்கள் மன்னார் மாவட்டத்தில் இருந்து இந்து சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கான ஆசன ஒதுக்கீட்டை வழங்க விரும்பவில்லை. ஆசன ஒதுக்கீடு தரவும் தயாராக இல்லை.

அதன் அடிப்படையில் எங்களுடைய மக்களுக்காக நாங்கள் சுயேட்சையாக போட்டியிட வேண்டும்.

ஏனெனில் மன்னார் மாவட்டத்தில் இருந்து ஒரு இந்து வேட்பாளர் நிச்சயம் நாடாளுமன்றத்திற்கு செல்ல வேண்டும் என்கின்ற நிலைப்பாட்டில் இந்து மக்கள் இருக்கின்றார்கள்.

ஒவ்வொரு மாவட்டத்தில் இருக்கின்றவர்களும், ஒவ்வொரு சமயத்தில் இருக்கின்றவர்களும் தங்களுடைய பிரதிநிதிகள் வர வேண்டும் என விரும்புகின்ற போது, எங்களுக்காக குரல் கொடுக்கக் கூடிய ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எங்களுடைய சமூகத்தில் இல்லாத காரணத்தினால் நாங்கள் இம்முறை மன்னாரில் இருந்து ஒரு வேட்பாளரை சுயேட்சையாக போட்டியிட வைக்க முடிவு செய்துள்ளோம்.

இந்த சுயேட்சை அமைப்பானது தமிழ் தேசியத்திற்கு எதிரானதாகவோ அல்லது ஆளும் கட்சி,ஏனைய அரசியல் கட்சிகளுக்கு எதிரான ஒரு கட்சியாகவோ இயங்கப் போவதில்லை.

நாங்கள் எங்களுடைய அடிப்படை உரிமைகளை பெற்றுக் கொள்வதற்கும், எங்களுக்கு ஏற்படுகின்ற பிரச்சினைகளுக்கு எங்களுக்காக குரல் கொடுக்கக்கூடிய ஒரு சூழ்நிலையை நாமே ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய ஒரு தேவை காலத்தின் கட்டாயமாக உள்ளது.

இவ்விடயம் தொடர்பில் ஆலயத்தின் பிரதிநிதிகள், சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள், புத்தி ஜீவிகள், கல்வியாளர்கள் போன்றவர்களிடம் ஆலோசனைகளை கேட்டோம்.

அதற்கமைவாக எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் மன்னார் மாவட்டத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு எங்களுக்கு உரிய தீர்வுகளை பெற்றுக் கொள்ளக் கூடியவர்களாக நாங்கள் உருவாக வேண்டும் என்ற கருத்தை அவர்கள் முன் வைத்தனர். அதற்கமைவாக மக்களுக்கு அதனை தெரியப்படுத்த வேண்டிய சூழ்நிலை உள்ளது.

எந்ததெந்த மாவட்டங்களில் யாரை வேட்பாளர்களாக நியமிப்பது என்பது தொடர்பில் நாங்கள் கலந்தாலோசித்து வருகின்றோம், என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

குறித்த ஊடக சந்திப்பில் மன்னார் மாவட்ட இந்து குருமார் பேரவையின் பிரதிநிதிகள், இந்துக் குருக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.