தேர்தல் ஆணைக்குழு சுயாதீனமாக செயற்படுகிறதா என சந்தேகம் - கெஹெலிய ரம்புக்வெல்ல

Report Print Steephen Steephen in தேர்தல்

தேர்தல் ஆணைக்குழு தற்போது நடந்துக்கொள்ளும் விதத்திற்கு அமைய ஆணைக்குழு சுயாதீனமாக செயற்படுகிறதா என்ற சந்தேகம் எழுவதாக முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

தேர்தல் சட்டத்திற்கு அமைய வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு, குறைந்தது 5 அல்லது 7 வாரங்களுக்குள் தேர்தலை நடத்த வேண்டும்.வேட்புமனுக்கள் தாக்கல் செய்வது மார்ச் மாதம் 19 ஆம் திகதி முடிவடைந்ததுடன் ஏப்ரல் 25 ஆம் திகதி வரை மொத்தம் 36 நாட்கள்.

இவ்வாறான நிலைமையில் தேர்தலை நடத்துவதற்காக சுமார் 70 நாட்கள் வரை கால அவகாசம் தேவை எனக் கூறியுள்ளமை சந்தேகத்திற்குரியது.

தேர்தலை நடத்துவதற்கு ஏதுவான சூழ்நிலை நாட்டில் காணப்படுவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கூறியிருக்கும் நிலையில் தொடர்ந்தும் தேர்தலை ஒத்திவைக்க தேர்தல் ஆணைக்குழு முயற்சித்து வருகிறது.

முடிந்தவரை தேர்தலை ஒத்திவைக்க வேண்டும் என்ற தேவை ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி உட்பட எதிர்க்கட்சிகளுக்கு இருக்கின்றது.

மக்களின் ஜனநாயக வாக்குரிமையை பாதுகாக்க வேண்டும்.தேர்தலை நடத்த ஏதுவான சூழ்நிலை காணப்படுகிறது.

சுகாதார துறையினர் உறுதிப்படுத்தினால் முதல் சந்தர்ப்பத்திலேயே தேர்தலை நடத்த வேண்டும் எனவும் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.