அம்பாறையில் கருணாவிற்கு அமோக வரவேற்பு! தேங்காய் உடைத்து மீண்டும் பிரச்சாரம் ஆரம்பம்

Report Print Vanniyan in தேர்தல்

தமிழர் மகா சபை சார்பில் நாடாளுமன்ற வேட்பாளராக போட்டியிடும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் இன்று முற்பகல் அம்பாறை மாவட்டம் கல்முனை அம்பலத்தடி பிள்ளையார் கோவிலில் தேங்காய் உடைத்த பின்னர் தனது பிரச்சாரத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஊடகம் ஒன்றில் தான் தெரிவித்த தேர்தல் பிரச்சார கருத்து தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வாக்குமூலம் ஒன்றினை வழங்கிய பின்னர் மீண்டும் தனது பிரச்சார பணியினை முன்னெடுப்பதற்காக அம்பாறை மாவட்டத்திற்கு வருகை தந்திருந்தார்.

இவ்வாறு வருகை தந்த கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனை அப்பகுதி பொதுமக்கள், இளைஞர்கள் இணைந்து மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து வந்தனர்.

அத்துடன் வாகன பவனி ஒன்றினையும் ஆதரவாக அப்பகுதி இளைஞர்கள் மேற்கொண்டு பட்டாசுகளையும் கொளுத்தி பாரிய வரவேற்பளித்தனர்.

இதனை தொடர்ந்து கல்முனையில் அமைந்துள்ள அம்பலத்தடி பிள்ளையார் ஆலயத்திற்கு சென்ற விநாயகமூர்த்தி முரளிதரன் பூசையில் ஈடுபட்டு தனது முதற் பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளார்.

கப்பல் இலச்சினையுடன் விநாயகமூர்த்தி முரளிதரனின் துண்டுப் பிரசுரங்கள் யாவும் அம்பாறை மாவட்ட தலைவர் சுதா தலைமையில் கல்முனை நகர பகுதி எங்கும் பொதுமக்களிடம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் இத்துண்டுப் பிரசுரங்கள் கருணா அம்மானினால் கல்முனை அம்பலத்தடி பிள்ளையார் கோயில் ஆராதனையின் பின்னர் பாண்டிருப்பு சந்தை இதாளவட்டுவான் சந்தி, நீலாவணை, நற்பிட்டிமுனை, சேனைக்குடியிருப்பு ஆகிய பகுதியில் மக்களுக்கு வழங்கப்பட்டு ஆரம்பித்து வைக்கப்பட்டது.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிறுத்தி மக்கள் மத்தியில் விழிப்பூட்டல் பிரச்சாரம் மேற்கொள்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது. தற்போது தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில் இப்பிரசாரம் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.