பௌத்த ஆதிக்கத்தை உடன் நிறுத்த வேண்டும் - ஜனாதிபதியிடம் கோரிக்கை

Report Print Gokulan Gokulan in தேர்தல்

திருகோணமலை கோணேஸ்வர ஆலயம் தொடர்பாக பௌத்த மதகுருக்களால் மேற்கொள்ளப்படுகின்ற பௌத்த ஆதிக்கத்தை நிறுத்த ஜனாதிபதி தூரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஈ.பி.ஆர்.எல். பத்மநாபா மன்ற தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் இரா. துரைரெட்ணம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள ஈ.பி.ஆர்.எல். பத்மநாபா மன்ற காரியாலயத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள போரதீவுப்பற்று வெல்லாவெளி, மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை, மண்முனைமேற்கு வவுணதீவு, ஏறாவூர்பற்று செங்கலடி, கோறளைப்பற்று, தெற்கு கிரான், கோறளைப்பற்று வடக்கு வாகரை இப் பிரதேசசெயலகப் பிரிவுகளிலுள்ள மாகாண நீர்பாசனம், மத்திய நீர்பாசனம், வனவளத் திணைக்களக் காணிகளிலும், மகாவலிக்குரிய காணிகளிலும், தனியார் காணிகளிலும், ஏனைய வாவிகளிலும், வாய்க்கால்களிலும், மேட்டுநிலம் போன்ற சில இடங்களில் மணல் அகழப்படுவதால் இயற்கை சூழலுக்கும், விவசாயச் செய்கைக்கும், பொதுமக்கள் வாழுகின்ற கிராமங்களுக்கு வெள்ள அபாயமும் ஏற்படக் கூடியவாறு ஒரு சில அமைப்புக்களின் தனி நபர்களும், ஒரு சில அதிகாரிகளும், ஒரு சிலரின் அரசியல் பின்னணியுடனும் அனுமதி வழங்கப்படுகின்றன.

இதனால் ஒரு சில தனிநபர் ஆதாயத்தைப் பெற்று முழு மாவட்டமும் பெரும் அபாயத்தை சந்திக்கப் போகின்றது.

பிரதமரால் குறிப்பிட்ட தினங்களாக கூறப்படும் ஜனாதிபதியின் கீழுள்ள ஆணைக்குழுக்களை மாற்றுவது தொடர்பான கருத்து சிறுபான்மை இனங்களின் குறிப்பாக தமிழர்களின் கருத்து சுதந்திரத்தையும், ஜனநாயகத் தன்மையையும், நல்லாட்சி முறையையும் இல்லாது ஓழித்து விடும்.

ஆணைக்குழுக்களை இல்லாமல் செய்வதன் ஊடாக ஒரு தனி நபரின் இராணுவ ரீதியான ஆட்சி முறையை மேலோங்கச் செய்யும்.

மட்டக்களப்பு மாவட்டதிலுள்ள சில அமைப்புக்களின் பிரதிநிதிகளும், அரச நிர்வாகத்தின் கீழ் செயற்படுகின்ற அமைப்புக்களின் உறுப்பினர்களும், அரசதுறை சார்ந்த வளங்களைப் பயன்படுத்தி தமக்கான செயற்பாடுகளை மேற்கொள்வதை தேர்தல் ஆணைக்குழு கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நாடாளுமன்றத் தேர்தலில் அதிக ஆசனங்களை பெற்றால் மட்டுமே நாடாளுமன்றத்தில் தமிழர்களுக்காக குரல் எழுப்புவதோடு பௌத்த ஆதிக்கத்திலிருந்து மட்டக்களப்பு மாவட்ட மக்களை காப்பாற்ற முடியும்.

எனவே அதிக ஆசனங்களை பெறக்கூடியவாறு உள்ள வீட்டுச்சின்னத்திற்கு வாக்களித்து வாக்குகளைப் பிரிப்பதற்காக போட்டிபோடுகின்ற வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டாமென அறைகூவல் விடுக்கின்றேன் என்று கூறியுள்ளார்.