கொரோனா தொற்றின் முதலாவது அலையின் தாக்கமே தற்போது ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது: மகிந்த தேசப்பிரிய

Report Print Theesan in தேர்தல்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம், தொற்றின் இரண்டாவது அலை என்று கூறப்பட்டாலும் அது சுகாதார தரப்பினரால் தற்போதும் முதலாவது அலையினுடைய தாக்கம் என்றே தெரிவிக்கப்பட்டிருக்கின்றது என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

நேற்று மாலை முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு விஜயமொன்றை மேற்கொண்டு அங்கு ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5ஆம் திகதி நடைபெறவுள்ள தேர்தலுக்காக வடமாகாணத்தின் மாவட்டங்களில் உள்ள தெரிவத்தாட்சி அலுவலர்கள், உதவி தேர்தல்கள் ஆணையாளர்கள் உள்ளிட்டவர்களோடு கலந்துரையாடும் முகமாக இந்த பயணம் மேற்கொள்ளபட்டிருக்கிறது.

இப்போதைய சூழ்நிலையில் இந்த நாட்டிலே ஆகஸ்ட் 5ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்குரிய முழு நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணைக்குழு முன்னெடுத்திருக்கின்றது.

குறிப்பாக கொரோனா வைரஸ் தொடர்பில் அனைவரும் இரண்டாவது அலை என்று கூறப்பட்டாலும் அது சுகாதார தரப்பினரால் இதுவரை இரண்டாவது அலை என தெரிவிக்கப்படவில்லை.

தற்போதும் அது தொற்றின் முதலாவது அலையினுடைய தாக்கம் என்றே தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

எனவே குறித்த காலப்பகுதியில் தேர்தலை நடத்தி முடிப்பதற்கு தேர்தல் ஆணைக்குழு உள்ளது என அவர் கூறியுள்ளார்.

இதன்போது அவர், மாவட்ட உதவி தேர்தல்கள் ஆணையாளரை சந்தித்ததோடு தேர்தல் அலுவலகத்தை பார்வையிட்டு முல்லைத்தீவு மாவட்ட செயலாளரை சந்தித்து மாவட்ட செயலகத்தின் அதிகாரிகள் மற்றும் தேர்தல் திணைக்கள உயரதிகாரிகள் ஆகியோருடன் முல்லைத்தீவு மாவட்டத்தின் தேர்தல் நிலமைகள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றையும் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்காதாகும்.