வன்னியில் 4200 பொலிஸார் தேர்தல் பாதுகாப்பு பணியில்! சமன் பந்துலசேன

Report Print Theesan in தேர்தல்

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அளிக்கப்படும் வாக்குகளை எண்ணுவதற்காக வன்னி தேர்தல் மாவட்டத்தில் 61 வாக்கெண்ணும் நிலையங்கள் அமைக்கப்படவுள்ளதுடன், 4200 பொலிஸார் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக வவுனியா மாவட்ட அரச அதிபரும்,தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலருமான சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார்.

வவுனியா மாவட்ட செயலகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

வன்னியில் தபால்மூல வாக்குகள் 95 சத வீதம் அளிக்கப்பட்டுள்ளது. இதுவரை 12480 பேர் தமது வாக்குகளை செலுத்தியுள்ளனர். வன்னியில் இடம்பெயர்ந்த வாக்காளர்களாக 6278 பேர் பதிவு‌ செய்யப்பட்டுள்ளனர். அவர்களில் 5707 மன்னார் மாவட்டத்தை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். அவர்களிற்காக 25 வாக்களிப்பு நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இந்த இடங்களில் வாக்களிப்பின் பின்னர் அனைத்து வாக்கு பெட்டிகளும் பாதுகாப்பான முறையில் வவுனியா மாவட்ட செயலகத்திற்கு எடுத்து வருவதற்கான ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் இதுவரையில் 78 சிறிய தேர்தல் முறைப்பாடுகளே பதிவு‌ செய்யப்பட்டுள்ளது. பாரிய வன்முறை சம்பங்கள் பதிவாகவில்லை. அண்ணளவாக 4200 பொலிசார் தேர்தல் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படுவதுடன். வவுனியாவில் மாத்திரம்1500 ற்கும் மேற்பட்ட அரச அலுவலர்கள் தேர்தல் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

கடந்த தேர்தல்களில் மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலருக்கு கிடைக்கப்பெற்ற பெறுபேறுகளின்‌அடிப்படையில், முடிவுகளை அறிவித்தோம். இம்முறை வாக்கெண்ணல் செயற்பாடுகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மோசடிகள் இடம்பெறாத வகையிலே இந்த செயற்பாடுகளை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில் வவுனியா மாவட்டத்தில்18 வாக்கெண்ணும் நிலையங்களும் மன்னாரில் 15, முல்லைத்தீவில் 14 வாக்கெண்ணும் நிலையங்களும், 13 தபால் வாக்கெண்ணும் நிலையங்களும், இடம்பெயர்ந்தவாக்குகள் எண்ணுவதற்கு ஒரு நிலையமுமாக மொத்தம் 61 வாக்கெண்ணும் நிலையங்கள் வன்னியில் அமைக்கப்படும்.

அத்துடன் ஒருவாக்காளர் எந்தப்பிரதேசத்தில் இருந்தாலும் அங்கிருந்தே வாக்களிப்பதற்கு உரிமுறையில் விண்ணப்பங்களை மேற்கொண்டால் தேர்தல் ஆணைக்குழு அவரது பாதுகாப்பு விடயத்தை கருத்தில் கொண்டு வாக்களிப்பதற்கான உரிமையை ஏற்றுக்கொள்ளும்.

அதற்கமையவே வன்னியிலிருந்து புத்தளம் பகுதிக்கு இடம்பெயர்ந்தவர்களிற்கு வாக்களிப்பதற்கான வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது.தேர்தல் ஆணைக்குழுவின் பரிந்துரையின் பிரகாரம் அந்த கட்டளை எமக்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனை செயற்படுத்துபடுத்தும் தெரிவித்தாட்சி அலுவலர்களான நாம் இருப்போம் எனவும் தெரிவித்துள்ளார்.