கிழக்கில் ஒட்டுக்குழுக்களை தமிழ் மக்கள் நிராகரிக்கவேண்டும்- கிழக்கு பல்கலை மாணவர்கள் கோரிக்கை!!

Report Print Gokulan Gokulan in தேர்தல்

எமது இனத்தின் உரிமையையும் எமது நிலத்தையும் காப்பதற்கு சரியாகவும் உண்மையாகவும் செயற்படும் தமிழ் பிரதிநிதிகளை நாடாளுமன்றத்திற்கு தெரிவு செய்ய வேண்டிய தலையாய கடமை எம் அனைவருக்கும் உண்டு. இதனை கருத்திற்கொண்டு எமது இனத்தின் உரிமைக்காக செயற்படுபவர்களுக்கு தமிழ் மக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என கிழக்கு பல்கலைக்கழக கலைகலாசார பீட மாணவர் ஒன்றியம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கில் ஒட்டுக்குழுக்களை நிராகரித்து தமிழ் தேசியம் சார்ந்த கட்சியில் உள்ள வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் என அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது

இந்த தேர்தலில் தமிழ் மக்கள் நலன் சார்ந்து உரிமையை மீட்டெடுப்பதற்காக களம் இறங்குவதாக தங்களை அடையாளப்படுத்துகின்ற தமிழ் அரசியல் கட்சிகளில் நாம் யாரை ஆதரிக்க வேண்டும் என்ற தெளிவான நிலைப்பாட்டிற்கு வர வேண்டிய கட்டாய சூழ்நிலையில் நின்று கொண்டிருக்கிறோம்.

எம்மைப் பொறுத்தவரை இலங்கையில் பிரகடனப்படுத்தப்படுகின்ற எந்த தேர்தல்களிலும் எமது இனத்தின் அபிலாசைகளை பூர்த்தி செய்யக் கூடியதாகவோ அல்லது வடக்கு கிழக்கு மக்களின் உரிமைகளை பெற்றுத்தரக் கூடியதாகவோ அமையவில்லை என்பதே உண்மை. இதற்கு பல காரணங்கள் உண்டு.

இலங்கையில் 1981ல் இருந்து 2011 ஆண்டு வரையான கடந்த 30வருட கால சனத்தொகை வளர்ச்சியை அவதானிக்கும் போது சிங்கள மற்றும் முஸ்லீம் மக்களின் சனத்தொகை வளர்ச்சியோடு ஒப்பிடும் போது தமிழ் மக்களின் சனத்தொகை வளர்ச்சி வீதம் பாரிய வீழ்ச்சியை கண்டுள்ளது.

இவ்வாறான நிலைமை தொடருமானால் எமது இருப்பை தக்க வைத்துக்கொள்ள முடியாது. எமது இருப்பை தக்க வைத்துக்கொள்ள முடியாவிட்டால் எமது நிலத்தையும் பாதுகாக்க முடியாமல் போகும். நிலத்தை பாதுகாக்க முடியாமல் போனால் உமது உரிமையையும் பாதுகாக்க முடியாது. எனவே தான் எமது இனத்தின் உரிமையையும் நிலத்தையும் காப்பதற்கு சரியானதும் உண்மையானதுமான பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்ய வேண்டிய தலையாக கடமை எமக்கு உண்டு.

தமிழ் தேசியத்திற்கு எதிராக நின்று தமிழ் மக்களின் உணர்வுகளையும் உரிமைகளையும் இன்றுவரை கொன்றொழித்தவர்களை தமிழ் மக்கள் முற்றாக நிராகரிக்க வேண்டும் என்பதே எமது குறிக்கோள்.

கிழக்கு மாகாணத்தில் திருகோணமலைஇ மட்டக்களப்பு அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் உள்ள தமிழ் உறவுகள் அனைவரும் உங்கள் பெறுமதியான வாக்குகளை இனத்தின் உரிமையையும் இருப்பையும் கவனத்தில் கொண்டு வாக்களிக்க வேண்டும்.

அம்பாறை தேர்தல் களத்தில் வாக்களிக்க இருக்கும் எமது அன்பான உறவுகளிடம் நாம் வேண்டி நிற்பது என்னவெனில் தமிழ் மக்களின் உரிமைக்காக செயற்படும் தமிழ் தேசியக்கட்சிகளில் ஏற்கனவே தங்களால் தெரிவு செய்யப்பட்டவர்களில் உங்களுக்கு வெறுப்பு நிலை ஏற்பட்டிருப்பின் அவர்களை நிராகரித்து தமிழ் தேசிய கொள்கையுடன் செயற்படும் புதிய வேட்பாளர்களை தெரிவு செய்யும் உரிமை எமக்கு உண்டு என்பதை நினைவு படுத்த விரும்புகிறோம்.

அதேபோன்று மட்டக்களப்பு திருகோணமலை மாவட்டங்களில் உள்ள உறவுகளும் இதனை கருத்தில் கொண்டு செயற்படுவதே நன்று என்பதை இவ்விடத்தில் கூறிக்கொள்ள விரும்புகிறோம்.

மீண்டும் மீண்டும் அதேதவறுகளை செய்து துரோகங்களாலும் பழிவாங்கல்களாலும் தினமும் அல்லல் பட்டுக்கொண்டிருக்கின்ற நாம் இம்முறை இவை அனைத்தையும் உடைத்தெறிந்து எமது உரிமைகளை மீட்டெடுக்க பயணிக்க வேண்டும்.

225 ஆசனங்னகளில் கூடியது 22 ஆசனங்களை பெறும் தமிழர் அரசியல் தலைமைகள் அதனை வைத்துக்கொண்டு எந்த வகையிலும பேச்சுவார்த்தைகளில் ஈடுபடவோ அல்லது பேரம் பேசுதலில் ஈடுபடவோ முடியாது. அது நடைமுறைச்சாத்தியமற்றது என்பது வெளிப்படையான உண்மையாகும்.

ஆனால் இவ்வாறான தேர்தல்களை சர்வதேச அரசியல் நடவடிக்கைகளுக்காகவும் எமது மக்களின் வாழ்வாதார பிரச்சினைகளுக்காகவும் அழிந்து கொண்டிருக்கும் எமது இனத்தின் இருப்பை நிலை நிறுத்திக்கொள்வதற்காகவும் பயன்படுத்திக் கொள்ள முடியும். அதற்காகவேனும் நாம் ஒவ்வொருவரும் வாக்கு சாவடிக்கு சென்று வாக்களிக்கும் மனநிலைக்கு முன்வர வேண்டும் என்பது மாணவ சமூகமாகிய எமது வேண்டுகோளாகும்.

அதேநேரத்தில் வடக்கில் உள்ள அரசியல் நிலைமை வேறு கிழக்கில் உள்ள அரசியல் நிலைமை வேறு. இதனை நாம் நன்கு புரிந்து கொள்ள வேண்டிய தருணம் இதுவாகும். அதிலும் திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக பல ஒட்டுக்குழுக்கள் இணைந்து எமது வாக்குகளை பிரிக்கும் செயலில் ஈடுபட்டுள்ளன.

எனது கிழக்கு பல்கலைக்கழக சமூகமாகிய நாம் உங்களிடம் கரம் கூப்பி வேண்டி நிற்பது எமது சமூகத்தின் ஒற்றுமை குலைந்து போகக்கூடாது என்பதே ஆகும். இதனை கருத்திற்கொண்டு எமது வாக்குகளை சிதற விடாமலட எமது கோரிக்கைக்கு செவிசாய்க்கும் தமிழ் அரசியல் தலைமையை தெரிவு செய்ய வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாக உள்ளது.

அந்த வகையில்

தமிழ் தேசிய கோட்பாடுகளில் சித்தாந்த ரீதியாகவும் செயற்பாட்டு ரீதியாகவும் தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயற்படுதல்.

எமது சமூகம் தாங்கள் ஒடுக்கப்படுகிறோம் என நினைக்கும் காணி அபகரிப்பு, மனித உரிமை மீறல்கள், ஆட்கடத்தல்கள், மற்றும் கைதுகள்வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான நடவடிக்கைகளுக்கு எதிராக போராடும் எமக்கு துணையபக நிற்கும்.

இலங்கையிலும் புலத்திலும் உள்ள பொதுமக்கள் கட்டமைப்புக்கள், புத்திஜீவிகள், மதகுருமார்கள் அனைவரையும் ஒன்று திரட்டி தமிழ் மக்களின் மனநிலையை புரிந்து கொண்டு அதற்கேற்றவாறான தீர்வு திட்டங்களை முன்வைத்தல்.

கிடைக்கப்பெறும் ஆசனங்களை பயன்படுத்தி யுத்தத்தால் பாதிக்கப்பட்ட எமது மக்களின் வாழ்வாதாரத்தினை துரிதகதியில் மேம்படுத்துவதற்கான சரியான திட்டங்களை வகுத்து செயற்படல்.

மேற்கூறப்பட்ட அம்சங்கள் அனைத்திலும் தம்மை உளமார ஈடுபடுத்திக்கொள்ளும் வேட்பாளர்கள் எவரோ அவர்களுக்கு நாம் எமது பூரண ஆதரவை நல்குவதுடன் அவர்களின் வெற்றிக்காகவும் எம்மாலானவற்றை செய்வோம் எனத்தெரிவித்துக்கொள்கிறோம் என கிழக்கு பல்கலைக்கழக கலை கலாசார பீட மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கையில் கிழக்கு பல்கலைக்கழக கலைகலாச்சார பீட மாணவர் ஒன்றிய தலைவர் வை. சுரேஷ்குமார் கையொப்பம் இட்டுள்ளார்.