திருகோணமலையில் நான்கு எம்.பிக்களை தேர்ந்தெடுப்பதற்கான ஏற்பாடுகள் பூர்த்தி

Report Print Mubarak in தேர்தல்

திருகோணமலை மாவட்டத்தின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியென திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும், தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரியுமான ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்த்தன தெரிவித்துள்ளார்.

தேர்தல் தொடர்பாக ஊடகங்களுக்கு இன்றைய தினம் மாவட்ட செயலகத்தில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

எதிர்வரும் ஐந்தாம் திகதி நடைபெறவிருக்கும் நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் இம் முறை 13 அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 189 வேட்பாளர்களும், 14 சுயாதீன குழுக்களும் திருகோணமலை மாவட்டத்திலிருந்து 4 பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க போட்டியிடுகின்றனர்.

மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட இரண்டு இலட்சத்து 86,868 வாக்காளர்களுக்கு மூதூர், திருகோணமலை மற்றும் சேருவில வாக்காளர்களுக்காக வேண்டி 307 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

கடந்த மாதம் நடைபெற்ற தபால் வாக்குகளில் 15200 தபால் வாக்காளர்கள் மாவட்டத்தில் தபால் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். அவர்களில் 14907 பேர் வாக்களித்திருந்தனர். வாக்களிப்பு வீதத்தில் இது 98%.

மேலும் இந்த பொதுத் தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் கிட்டத்தட்ட 4500 அதிகாரிகளும், இலங்கை பொலிஸ் அதிகாரிகளும் தேர்தல் கடமைகளுக்கு அனுப்பப்பட உள்ளனர்.

தேவையான அனைத்து பயிற்சி வகுப்புகளும் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இம்மாதம் 4 ஆம் திகதி காலை 7.00 மணி முதல் வாக்குப் பெட்டிகளை வழங்க ஏற்கனவே ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

திருகோணமலை விபுலானந்தா கல்லூரி வாக்குப் பெட்டிகளுக்கான வாக்கெண்ணும் மையமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த முறை வாக்களிப்பு சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின் பேரில் நடைபெறுவதோடு பொதுமக்கள் வாக்குச் சாவடிக்கு வாக்களிக்க வாக்களிக்கும் நிலையத்திற்கு வரும்போது அறிவுறுத்தல்களைப் பின்பற்ற வேண்டும்.

திருகோணமலை விபுலானந்தா கல்லூரியில் ,திருகோணமலையில் அமைக்கப்பட்ட 44 வாக்கெண்ணும் எண்ணும் மையங்களில் 6ஆம் திகதி காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணப்படும், அவற்றில் 9 தபால் எண்ணும் மையங்களாக செயல்படும்.

மக்கள் எந்தவித தயக்கமும் இன்றி தேர்தலுக்கு தேர்தல் தினம் சென்று உங்களின் வாக்களிக்கும் உரிமை ஜனநாயக அம்சமாகும் என குறிப்பிட்டுள்ளார்.