நாடாளுமன்ற தேர்தல்! திருகோணமலை மாவட்டத்தில் அனைத்து பணிகளும் பூர்த்தி

Report Print Mubarak in தேர்தல்

நாடாளுமன்ற தேர்தலுக்காக திருகோணமலை மாவட்டத்திற்கான தேர்தல் முன்னேற்பாடுகள் அனைத்தும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் ஜே.எஸ்.டி.எம்.அசங்க அபேவர்தன தெரிவித்தார்.

மாவட்ட செயலகத்தில் இன்று மாலை ஊடகவியலாளர்களை சந்தித்து பேசிய அவர் அதனை கூறியுள்ளார். இது குறித்து தொடர்ந்தும் பேசியுள்ள அவர்,

இம்முறை திருகோணமலை தேர்தல் மாவட்டத்தில் மொத்தமாக 288,868 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். அவர்களது வாக்குப்பதிவிற்காக 307 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

அனைத்து வாக்குச்சாவடிகளுக்குமான வாக்குப் பெட்டிகள் மற்றும் வாக்குச் சீட்டுகள் என்பன அனுப்பிவைக்கும் நடவடிக்கைகள் இன்று காலை பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.

அனைத்து பகுதிகளுக்குமான பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளதுடன் அதற்காக முப்படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கைகள் அனைத்தும் சுகாதார சேவையினர்களது மேற்பார்வையின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

தேர்தலின் முன்னரும் பின்னரும் அனைத்து வாக்குச்சாவடிகளிலும் தொற்று நீக்கல் செய்வதற்கான முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

நாளை வாக்களிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட பின்னர் வாக்குப் பெட்டிகள் அனைத்தும் வாக்கெண்ணும் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டு, வாக்கெண்ணும் நடவடிக்கைகள் அனைத்தும் நாளை மறுதினம் காலை முதல் ஆரம்பிக்கப்படும்” என கூறியுள்ளார்.

திருகோணமலையை பிரதிநிதித்துவப்படுத்தும் 4 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக இம்முறை பதிவுசெய்யப்பட்ட கட்சிகள் 13 மற்றும் 14 சுயேட்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.