2020 பொதுத்தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் நிறைவு

Report Print Sujitha Sri in தேர்தல்

இலங்கையின் ஒன்பதாவது நாடாளுமன்றத்திற்கான (2020) உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் இன்று காலை ஏழு மணிக்கு ஆரம்பமாகியிருந்த நிலையில் மாலை ஐந்து மணிக்கு நிறைவடைந்துள்ளது.

இம்முறை தேர்தலில் 40 அரசியல் கட்சிகள் மற்றும் 352 சுயேட்சை குழுக்கள் சார்ப்பில் 7,452 வேட்பாளர்கள் போட்டியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் பொது தேர்தலில் வாக்களிக்க 1 கோடி 62 இலட்சத்து 63 ஆயிரத்து 885 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த போதும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் உள்ளவர்களுக்கு இம்முறை வாக்களிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை.

12,985 வாக்களிப்பு மத்திய நிலையங்களில் இன்று (05) காலை 7 மணிக்கு ஆரம்பமான வாக்களிப்பு நடவடிக்கைகள் மாலை 5 மணி வரையில் இடம்பெற்றதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பொதுத் தேர்தலுக்கான வாக்கு எண்ணும் பணிகள் 2,773 நிலையங்களில் இடம்பெறவுள்ளதுடன் வாக்கு எண்ணும் நடவடிக்கைகள் காலை 7 மணிக்கு அல்லது 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதாகவும் தெரியவருகிறது.

அத்துடன் தேர்தல் நடவடிக்கைகளை முன்னிட்டு நாட்டில் பல பகுதிகளிலும் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.