தமிழ்த் தேசிய அரசியலுக்கு அபாயச் சங்கு!

Report Print Tamilini in தேர்தல்

இம்முறை பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் எடுத்த முடிவு சரியானதா? இந்தக் கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்கு வங்கி சரிந்து போனது, சுமந்திரன், சிறிதரன் வெற்றி பெற்றது,

எதிர்பார்க்கப்பட்டது போன்று வடக்கில் விக்னேஸ்வரன் தலைமையிலான கூட்டணி சோபிக்கத் தவறியது, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு இரண்டு ஆசனங்கள் கிடைத்தது,

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் யாழ்ப்பாணத்தில் பெற்றிருக்கின்ற வாக்குகள், கிழக்கில் அம்பாறையில் தமிழ்ப் பிரதிநிதித்துவம் இழக்கப்பட்டது,

திருகோணமலையில் இரா.சம்பந்தனின் வெற்றி என பல காரணங்களை முன்வைத்து தமிழ் மக்கள் எடுத்த முடிவு சரியானதா என்ற கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

வாக்குகள் ஒவ்வொருவரதும் உரிமை. அந்த வாக்குகள் அளிக்கப்பட்டதற்கான காரணத்தை மதிப்பிடாமல் வாக்களித்த மக்களின் மீது குற்றச்சாட்டுகளை சுமத்துவது தவறு.

வாக்காளர்கள் எப்போதும் முதலில் தமது பிரச்சினைகளில் இருந்து தான் முடிவுகளை எடுப்பார்கள். அடுத்ததாகத் தான் பொதுப் பிரச்சினைகளின் மீது கவனம் செலுத்துவார்கள்.

ஆயினும் இரண்டையும் சமநிலைப்படுத்தும் ஒரு பொறிமுறை பெரும்பாலான வாக்காளர்களிடம் இருக்கும்.

அதனை அவர்கள் தமது கல்வியறிவு மூலமாகவோ சுற்றுப்புற சூழ்நிலைகளின் மூலமாகவோ பிறரின் அறிவுரைகள் மூலமாகவோ உருவாக்கிக் கொள்வார்கள்.

இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் 2 ஆசனங்கள் உள்ளிட்ட 6 ஆசனங்களை இழந்திருக்கிறது. இது அவர்களுக்கு முக்கியமான ஒரு பின்னடைவு. ஆனால் இது எதிர்பார்க்கப்படாத பின்னடைவு அல்ல.

காரணம் 2015 தேர்தலை விட இம்முறை கூட்டமைப்புக்கு போட்டி கடுமையாக இருந்தது. அதேவேளை கூட்டமைப்பு அப்போதிருந்ததை விடப் பலவீனப்பட்டுப் போயிருந்தது.

குறிப்பாக சி.வி.விக்னேஸ்வரன் உடைத்துக் கொண்டு போன வாக்குகள் பெரும்பாலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினுடையது தான்.

உள்ளூராட்சித் தேர்தலின் போதே கூட்டமைப்பின் வாக்கு வங்கி சரிவைச் சந்தித்திருந்தது. 2015 பாராளுமன்றத் தேர்தலில் 5,15,963 வாக்குகளைப் பெற்றிருந்த கூட்டமைப்புக்கு 2018 உள்ளூராட்சித் தேர்தலில் 3,37,877 வாக்குகள் தான் கிடைத்தன.

எனவே இந்தத் தேர்தலில் கூட்டமைப்பு அமோக வெற்றியைப் பெறும் அதிசயங்கள் நிகழும் என்று எவரும் எதிர்பார்க்கக் கூடிய நிலை இருக்கவில்லை.

ஆயினும் இம்முறை கூட்டமைப்புக்கு 3,27,168 வாக்குகள் கிடைத்திருக்கின்றன. 2018 உள்ளூராட்சித் தேர்தலை விட இம்முறை கூட்டமைப்புக்கு 10ஆயிரம் வாக்குகள் வரையான சரிவே ஏற்பட்டிருக்கிறது. இது விக்னேஸ்வரனின் பிளவுக்குப் பிந்தியது என்பது கவனத்தில் கொள்ள வேண்டியது.

இவற்றுக்கு அப்பால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தோற்கடிப்பதற்காக உச்சக்கட்டப் பலம் எல்லாப் பக்கங்களில் இருந்தும் பிரயோகிக்கப்பட்டது.

குறிப்பாக யாழ்ப்பாணத்தில் இந்த முயற்சி கடுமையாக முன்னெடுக்கப்பட்டது. இவ்வாறான பலமுனைத் தாக்குதல்களை எதிர்கொள்ளும் போது கூட்டமைப்புக்கு சரிவு ஏற்படும் என்பது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்று தான்.

தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி ஆரம்பத்தில் பெரும் எதிர்பார்பபை ஏற்படுத்தி இடையில் கொஞ்சம் தொய்ந்து போய் இறுதிக் கட்டத்தில் ஓரளவுக்கு கவனத்தைப் பெற்றிருந்தது.

கூட்டமைப்பைத் தள்ளி விழுத்தும் பலம் தனக்கு இருப்பதாக விக்னேஸ்வரன் பகிரங்கமாக கூறும் அளவுக்கு பிரசாரம் வேகம் பெற்றிருந்தது.

ஆனால் இந்தத் தேர்தலில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியால் கூட்டமைப்புக்கு மாற்றாக எழ முடியவில்லை. இரண்டாம் மூன்றாம் நான்காம் இடங்களைக் கூட பிடிக்க முடியவில்லை. வடக்கில் ஐந்தாவது இடத்துக்கே வந்திருக்கிறது.

இந்தளவு மோசமான நிலையில் ஒரு ஆசனத்தைப் பெற்றிருப்பது அந்தக் கட்சிக்கும் அதன் வெற்றிக்காக பெருமளவில் உழைத்தவர்களுக்கும் ஆறுதல் அளிக்கின்ற செய்தி.

யாழ்ப்பாணத்தில் 35,927 வாக்குகளையும் வடக்கு கிழக்கில் 51,301 வாக்குகளையும் தான் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியால் பெற முடிந்திருக்கிறது.

இதற்குள் தான் விக்னேஸ்வரனின் வாக்குகள் உள்ளன. சிறிகாந்தா சிவாஜிலிங்கத்தின் வாக்குகளும் உள்ளன. அனந்தியின் வாக்குகளும் உள்ளன. சுரேஸ் பிரேமச்சந்திரனின் வாக்குகளும் இருக்கின்றன.

மிகப்பெரிய ஒரு கூட்டணியாக உருவகப்படுத்தப்பட்ட போதும் இந்த அணி சந்தித்துள்ள பின்னடைவு கவனத்தில் கொள்ளப்பட வேண்டியதொன்று.

2013 மாகாண சபைத் தேர்தலில் ஒரு லட்சத்து 30 ஆயிரம் விருப்பு வாக்குகளைப் பெற்ற விக்னேஸ்வரனால் யாழ்ப்பாணத்தில் 21 ஆயிரம் வாக்குகளைத் தான் பெற முடிந்திருக்கின்றது.

அவர் மாத்திரமன்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உறுப்பினர்களாக தெரிவான அனைவருமே கடந்த முறையை விட பாதிக்கு கீழ் இறங்கியிருக்கிறார்கள்.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத்தில் கிட்டத்தட்ட 55 ஆயிரம் வாக்குகளுடன் ஒரு ஆசனத்தை வென்றிருக்கிறது. தேசிய அளவில் 67,766 வாக்குகளைப் பெற்றிருப்பதன் மூலம் ஒரு தேசியப் பட்டியல் ஆசனத்தையும் பெற்றிருக்கிறது.

தனித்துப் போட்டியிட்ட இந்தக் கட்சி யாழ்ப்பாணத்தில் இரண்டாமிடத்துக்கு வந்திருப்பது சாதனை தான். யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சித் தேர்தலில் பெற்ற வாக்குகளை தக்க வைத்துக் கொண்டுள்ள போதும் அங்கு பொதுத் தேர்தலுக்காக வாக்கு வங்கியை உயர்த்த முடியவில்லை.

அதேவேளை ஒட்டுமொத்தமாக வடக்கு கிழக்கில் உள்ளூராட்சித் தேர்தல் நிலையுடன் ஒப்பிட்டுப் பார்த்தால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பின்னடைவைச் சந்தித்திருக்கிறது.

2015 பொதுத் தேர்தலில் 18,644 வாக்குகளை மட்டும் பெற்ற தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி 2018 உள்ளூராட்சித் தேர்தலில் 85,198 வாக்குகளைப் பெற்றிருந்தது. ஆனால் இந்த முறை 67,766 வாக்குகளைத் தான் பெற்றிருக்கிறது.

இரண்டு ஆசனங்களைக் கைப்பற்றியதை வைத்துக் கொண்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி இந்தச் சரிவை குறைத்து மதிப்பிட்டு விடக்கூடாது.

அவ்வாறு செய்தால் கூட்டமைப்பின் நிலை தான் ஏற்படும். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் வாக்குகள் இழக்கப்பட்டமைக்கு தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியே முக்கிய காரணம்.

உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் மக்கள் தேசியக் கூட்டணி போட்டியிடவில்லை. அது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு சார்பாக இருந்தது. இப்போது இரண்டும் தனித்தனியாக பிரிந்து நிற்கும் போது வாக்குகள் உடைந்திருக்கின்றன.

ஈபிடிபி வன்னியில் எதிர்பாராமல் ஒரு ஆசனத்தைப் பெற்றிருந்தாலும் யாழ்ப்பாணத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பலமான சவாலை சந்தித்துள்ளது.

சுதந்திரக் கட்சிக்கு கிடைத்திருக்கும் வாக்குகள் ஈபிடிபிக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் தான் யாழ்ப்பாணத்தில் நான்காமிடத்துக்கு ஈபிடிபி தள்ளப்பட்டது.

உடுப்பிட்டி தொகுதி சுதந்திரக் கட்சியால் கைப்பற்றப்பட்டிருக்கிறது. காங்கேசன்துறை தொகுதியில் இரண்டாமிடத்தைப் பிடித்திருக்கிறது.

மொத்தத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு மாத்திரமன்றி ஈபிடிபிக்கும் கூட இது சவாலாக மாறியிருக்கிறது.

இது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கோ அதன் தலைமைக்கோ கிடைத்த வாக்குகள் அல்ல. அங்கஜன் இராமநாதன் பெற்ற வாக்குகள்.

இந்தத் தேர்தலில் அவர் சுதந்திரக் கட்சி என்பதை முதன்மைப்படுத்தவும் இல்லை. தெற்கிலிருந்து அதன் தலைவர்களைக் கொண்டு வந்து பிரசாரம் செய்யவுமில்லை.

அவர் நம்பியதெல்லாம் பணத்தையும், அதிகார பலத்தையும் இளைஞர்கள் மத்தியில் இருந்த வேலையின்மை போன்ற பிரச்சினைகளையும் சாதாரண மக்கள் மத்தியில் வறுமையையும் மட்டும் தான்.

இதனைக் குறி வைத்து சரியாக காய்களை நகர்த்தினார். முன்னர் டக்ளஸ் தேவானந்தா கையாண்ட உத்தி இது.

எனினும் டக்ளஸ் தேவானந்தாவைப் போன்று தமிழ்த் தேசிய விரோத கருத்துக்களை இவர் வெளிப்படுத்தவில்லை. தன்னை சிங்களக் கட்சிகளின் பிரதிநிதியாக அடையாளம் காட்டவுமில்லை.

அங்கஜன் அணி என்று தான் தமிழ்த் தேசிய வாக்குகளை அவர் உடைக்க முயன்றார். தமிழ்த் தேசியத்துக்கும் வேலைவாய்ப்பு, வறுமை போன்ற சலுகைகளுக்கும் இடையில் ஊசலாடிய வாக்காளர்கள் பலர் இவர் பக்கம் சாய்ந்தனர்.

இந்தத் தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில் பேரினவாதக் கட்சி ஒன்று வலுவாக காலூன்ற இடமளித்த பெருமை தமிழ்த் தேசியக் கட்சிகளையே சாரும்.

தமிழ்த் தேசியக் கட்சிகள் தமக்கிடையில் முரண்பட்டுக் கொண்டு மோதியதன் விளைவு தான் இது.

ஒருவரை ஒருவர் வீழ்த்துவதில் காட்டிய அக்கறையை தமிழ்க் கட்சிகள் பொது எதிரியை வீழ்த்துவதில் செலுத்தவில்லை.

ஐக்கிய தேசியக் கட்சி தனது பிளவினால் யாழ்ப்பாணத்தில் ஆசனத்தை இழந்திருக்கின்ற அதேவேளை இன்னொரு பேரினவாதக் கட்சியிடம் அந்த ஆசனம் சென்று சேர்ந்திருக்கிறது. இதன் ஆபத்தை தமிழ்த் தேசியக் கட்சிகள் உணர்ந்திருக்கவில்லை.

வேலைவாய்ப்பு வாக்குறுதிகளும் வறுமையில் வாடும் மக்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகளும் நீட்டப்பட்ட சலுகைகளும் பிரசாரத்துக்காக தண்ணீராக வாரி இறைக்கப்பட்ட பணமும் எதிர்காலத்தில் யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசிய அரசியலுக்கு பெரும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது.

அதுபோன்றே கிழக்கிலும் தமிழ்ப் பிரதிநிதித்துவங்கள் பறிபோயிருக்கின்றன.

மட்டக்களப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இரண்டு புதுமுகங்கள் பாராளுமன்றம் செல்கிறார்கள். திருகோணமலையில் இரா.சம்பந்தன் தப்பிப் பிழைத்திருக்கிறார்.

அம்பாறை மாவட்டத்தில் தமிழ் பிரதிநிதித்துவம் கருணாவினால் பறிக்கப்பட்டிருக்கிறது.

இந்தத் தேர்தலில் கிழக்கில் பிரதேச வாதமும் தமிழ் மக்கள் மத்தியில் செல்வாக்குச் செலுத்தியது.

20 ஆசனங்களை எதிர்பார்த்த கூட்டமைப்பு பாதி ஆசனங்களுடன் தான் செல்லும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இது கூட்டமைப்புக்கு ஒரு பாடம் கற்பித்திருக்கிற தேர்தல்.

இனிமேலாவது திருந்திக் கொள்ள வேண்டும் என்று கொடுக்கப்பட்டிருக்கின்ற சிவப்பு சமிக்ஞை. கூட்டமைப்புக்கு அரசியலில் புதிய சவால்கள் பல முளைத்திருக்கின்றன. வரும் காலத்தில் அது இன்னும் தீவிரமடையப் போகிறது.

வடக்கில் விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார், டக்ளஸ் தேவானந்தா, அங்கஜன், சந்திரகுமார் ஆகியோர் தலைவலி கொடுப்பவர்களாக மாறுவார்கள்.

அதுபோல கிழக்கில் வியாழேந்திரன், பிள்ளையான் போன்றவர்களும் உருவெடுப்பார்கள்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொள்கை ரீதியாகவும் சவால்களைச் சந்திக்கப் போகிறது. சலுகை ரீதியாகவும் சவால்களுக்கு முகம் கொடுக்கப் போகிறது.

சலுகைகளை நீட்டியும் தமிழ் மக்களின் பலவீனங்களைப் பயன்படுத்தியும் வாக்குகளை அள்ளும் காலம் மீண்டும் உருவாகியிருக்கிறது.

அது அடுத்து வரும் தேர்தல்களில் அப்பட்டமாக நிகழப் போகிறது. இது தமிழ்த் தேசிய அரசியலுக்கு சவாலானது.

ஆனாலும் தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் இனிமேலும் விழிப்படையும் அறிகுறிகள் தென்படுவதாக இல்லை.

- என் . கண்ணன் -