ஐரோப்பிய பாராளுமன்றத்தின் கவனத்தை ஈர்த்த இலங்கையில் இடம்பெறும் தமிழின அழிப்பு

Report Print Dias Dias in ஐரோப்பா

ஐரோப்பிய பாராளுமன்றத்திற்குள் "இலங்கையில் இடம்பெறும் தமிழினவழிப்பும் தமிழர்களின் தேசிய உரிமை சாந்த மகாநாடு" தமிழர் இயக்கம் மற்றும், தமிழர் ஒன்றியம் பெல்யியம் அமைப்புக்களால் ஏற்பாடு செய்யப்பட்டு சிறப்பாக நடாத்தப்பட்டது.

28 நாடுகளின் 755 பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்ட ஐரோப்பிய பாராளுமன்றத்திற்குள் 103 பாராளுமன்ற உறுப்பினர்களை தம்வசம் வைத்துள்ள பசுமைக்கட்சியும் (Les Vers) மற்றும் இடதுசாரிக்கட்சியும் (GUE/NGL) இம்மாநாட்டிற்கான தமது நேரடி ஆதரவைத் தந்துதவினர்.

இதனை ஐரோப்பிய பாராளுமன்றத்தின் பிரதிநிதிகளான Mr.Jordi Solé மற்றும் Stefen Eck ஆகியோர் தலமையேற்று நடத்தியுள்ளனர்.

இந்த மாநாட்டில் தமிழீழம், தமிழகம் மற்றும் புலம்பெயர் தேச புத்திஜீவிகள், அரசியல் பிரமுகர்கள் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதேவேளை மாநாட்டை முன்னிட்டு கடந்த 15, 16 மற்றும் 17 திகதிகளில் தொடர்ச்சியாக சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன.

இதன்போது பெல்ஜிய நாட்டின் நாடாளுமன்ற வெளிவிவகார குழுவானது GSP+ வெளிவிவகார குழு, வலதுசாரி கட்சிகளின் தலைமை குழுக்கள், ஐரோப்பிய பாராளுமன்றத்தின் இத்தாலிய மற்றும் பிரித்தானிய பிரதிநிதிகள் என பலதரப்பட்ட உயர்மட்ட குழுக்களை சந்தித்திருந்தது.

இந்த நிலையில் தமிழினம் எதிர்நோக்கும் தமிழின அழிப்பையும், அனைத்துலக சமூகத்தால் தொடர்ந்தும் மறுக்கப்படும் நீதி சார்ந்தும் அதன் விளைவால் தொடரும் கட்டமைப்புசார் தமிழின அழிப்பு பற்றியும், தமிழீழ மக்களுக்கு இருக்கும் சுய நிர்ணய உரிமையையும், இறையாண்மையையும் தெளிவாக எடுத்துரைக்கப்பட்டிருந்தது.

குறிப்பாக நேற்று நடத்தப்பட்ட மாநாடு தமிழின அழிப்பின் போது படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கான அகவணக்கத்துடன் ஆரம்பமானது. அதை தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு கலந்து கொண்ட அனைவராலும் மலர்வணக்கமும் செலுத்தப்பட்டது.

அதனை தொடர்ந்து மாநாடு இரு பிரிவுகளாக நடத்தப்பட்டதுடன், மாநாட்டில் தமீழீழ மக்களின் வரலாறு, அவர்களின் தனி நாட்டுக் கோரிக்கைக்கான வரலாற்று மற்றும் மரபு சார் உரிமைகள், ஆயுத வழிப்போராட்டம் ஆரம்பமானதிற்கான அக மற்றும் புற சூழ்நிலைகள், தொடரும் கட்டமைப்பு சார் தமிழின அழிப்பு என அனைத்து விடயங்களும் புள்ளிவிபரங்களுடன் எடுத்துரைக்கப்பட்டன.

குறிப்பாக கட்டமைப்பு சார் தமிழின அழிப்பின் நிகழ்ச்சி நிரலில் மேற்கொள்ளப்பட்ட மற்றும் இன்றும் மேற்கொள்ளப்படும் “வலிந்து காணாமல் ஆக்கப்படுவோரின்” சார்பாக தாயகத்திலிருந்து கலந்து கொண்ட லீலதேவி (முல்லை மாவட்ட காணாமல் போனோர்கள் அமைப்பின் செயலாளர் மற்றும் பாதிக்கப்பட்ட நேரடி சாட்சியம்) தரவுகளுடன் நடந்தவற்றை எடுத்துரைத்தார்.

இதன்போது மாநாட்டில் கலந்து கொண்ட பாரளுமன்ற உறுப்பினர்களும், பிரத்தியேக சந்திப்புக்களில் கலந்து கொண்ட இராஜதந்திரிகளும் தமிழின அழிப்பிற்கு எதிரான தமது கண்டனத்தை தெரிவித்ததுடன், தமிழர்களின் சுயநிர்ணய உரிமையின் தேவைப்பாட்டையும் வலியுறுத்தியுள்ளார்.

ஐரோப்பாவிலிருக்கும் தமிழர்களுடன் தாம் நெருங்கிய உறவைப் பேண விரும்புவதாகவும் அவர்களின் உரிமைக்கான ஜனநாயக வழிமுறைப் போராட்டங்களுக்கு தாம் என்றும் உறுதுணையாக இருப்பதாகவும் இந்த மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் உறுதியளித்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து பெல்ஜியம் வாழ் தமிழர்களுடன், பெல்ஜியம் தமிழர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் மக்கள் சந்திப்பும் நடத்தப்பட்டுள்ளது.