ஐரோப்பியப் பெருங்கடலில் மடிந்துபோன மக்களுக்காக, அலைகடலின் மத்தியில் ஒரு ஆத்மசாந்திப் பிரார்த்தனை

Report Print Dias Dias in ஐரோப்பா

இத்தாலியின் ஜெனோவா ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம், அண்மையில் இடம்பெற்றுள்ளது.

இத்தாலியின் றப்பாலோ நகரின் மத்தியில் சிறப்பு மண்டபத்தில் விநாயகப் பெருமானுக்கு அபிஷேக பூஜை நடைபெற்று, றப்பாலோ தமிழ் சிறார்களின் கலைநிகழ்வுகளும், தாயகக் கவிஞரும், பாடகருமான செங்கதிர் அவர்களின் ' வரம் தர வேண்டும் ' இசைத்தட்டு வெளியீடும் இதன்போது இடம்பெற்றது.

மேலும், ஐரோப்பியப் பெருங்கடலில் வருடந்தோறும் பலியாகும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்களுக்காகவும் இதன்போது ஆத்மசாந்திப் பிரார்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டன.

மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இத்தாலியின் லிகூரியாப் பகுதியில் வாழும் தமிழ் மக்களின் பிரார்த்தனை தளமாக 2014ம் ஆண்டு உருவாகியதுதான் ஜெனோவா ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலயம்.

முதலாம் ஆண்டு நிறைவில் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சவம் கொண்டாடப்பட்ட 2015 ம் ஆண்டு செப்டெம்பர் மாத முதல் வாரத்தில் மத்தியதரைக்கடலில் மரணித்து, துருக்கிக் கரையில் கரையொதுங்கிய Alan Kurdi எனும் மூன்று வயது சிரிய - குர்திஸ் அகதிக் குழந்தையின் அகால மரணத்தை உலகிற்குப் படம் பிடித்துக்காட்டியவர் துருக்கியின் இளம் பத்திரிகையாளர் Nilüfer Demir (1986).

கரையொதுங்கி, முகம் கவிழ்ந்து கிடந்த அலன் குர்த்தியின் ( Alan Kurdi) அந்தப் படத்தினைப் பார்த்து உலகம் அரண்டுபோனது. அவனுக்காக, அவனது ஆத்மசாந்திக்காக முழு உலகமுமே பிரார்த்தித்தது.

வெளிச்சத்திற்கு வந்த ஒரு மரணத்துக்காக மட்டுமன்றி, இருளின் பிடியில் ஐரோப்பியப் பெருங்கடலின் பேரலைகளின் நடுவே வருடந்தோறும் மடிந்துபோகும் பல்வேறு நாடுகளின் பலநூறு மக்களுக்குமான ஆத்மசாந்திக்காக வருடந்தோறும் பிரார்த்திக்கச் சித்தமானார்கள் சித்தி விநாயகரின் அடியார்கள்.

2015ம் ஆண்டு ஜெனோவா ஶ்ரீ சித்தி விநாயகரின் தீர்த்தவாரி உற்சவத்தில், அன்னத்தில் விநாயாகரை வடிவமைத்து, சிவபுராணம் படித்து, மலர்தூவிப் பிரார்த்தனை செய்து, கடலில் கரைத்தார்கள்

2016ல் அந்த வழிபாட்டினை மேலும் விரிவுபடுத்தி தெப்போற்சவமாக, ஜெனோவாவிலிருந்து றப்பாலோ நகருக்கு அருள்மிகு சித்தி விநாயகரை எழுந்தருளச் செய்து, தெப்பமேற்றிப் பிரார்த்தித்து, அலைகடலின் மத்தியில் அன்ன விநாயகரை கரைத்துப் பிரார்த்தித்தார்கள்.

2017ஆம் ஆண்டில், இறையருளும், குருவருளும், கூடிவர, றப்பாலோ இந்து மன்றத்தினருடன் இணைந்து, தெப்போற்சவத்திற்காக, விநாயகரை வீதி பவனியாக எழுந்தருளச் செய்து, தெப்பமேற்றி, ஆழப் பெருங்கடல் சென்று, அமைதி வேண்டி வணங்கி வந்தார்கள்.

இந்த 2018ம் ஆண்டில் இவ் உற்சவம் மேலும் சிறப்பாக 07.07.2018ல் நடைபெற்றது. றப்பாலோ நகரின் மத்தியில் சிறப்பு மண்டபத்தில் விநாயகப் பெருமானுக்கு அபிஷேக பூஜை நடைபெற்று, றப்பாலோ தமிழ் சிறார்களின் கலைநிகழ்வுகளும், தாயகக் கவிஞரும், பாடகருமான செங்கதிர் அவர்களின் ' வரம் தர வேண்டும் ' இசைத்தட்டு வெளியீடும் இடம்பெற்றது.

றப்பாலோ இந்து மன்றத்தின் சிறப்பு ஏற்பாட்டில் அனைவருக்கும் அன்னதானமும், தாக சாந்திக்கான நீராகாரங்களும், வழங்கப்பட்டது. தொடர்ந்து இத்தாலியத் தெருக்களில், மங்கள வாத்தியம் முழங்க, தேவாரத் திருமுறைகள் பாடிவர, றப்பாலோ நகர காவல்துறையினர் வீதி பவனிக்கான ஒழுங்குபடுத்தல்களைக் குறித்த நேரத்தில் செய்து தர, மாலை 04.30 மணிக்கு Rapallo, Molo maloncello துறைமுகப்பகுதிக்கு வந்த விநாயகப்பெருமானை தமிழ் மாணவர்கள் வரவேற்று நடனம், கரகாட்டம், முதலான கலை நிகழ்வுகளை நிகழ்த்தினார்கள்.

சுவிற்சர்லாந்து சூரிச் நகரில் இருந்து வருகை தந்த மங்களவாத்தியக் கலைஞர்கள் குமரகுரு பாலச்சந்திரன் குழுவினரின் இனிமையான தவில் நாதஸ்வரக் கச்சேரியால், மேலும் சிறப்புச் சேர்த்தார்கள்.

இத்தாலி சவோனா மாதா கீதானந்தா ஆச்சிரமத் துறவிகள், சுவாமி ஜோதிமயானந்தா, சுவாமி தியானானந்தா, ஆகியோர் உற்சவத்திற்கு அருளாசி வழங்கினார்கள்.

இலங்கையிலிருந்து வருகை தந்திருந்த பிரம்ம ஶ்ரீ. பத்ம - ராகவ சர்மா, ஆலயகுரு சிவஶ்ரீ. சிவ.காமேஸ்வர சர்மா, டென்மார்கிலிருந்து வருகை தந்த பிரம்மஶ்ரீ. வி.சாரங்க சர்மா ஆகியோருடன், சுவிற்சர்லாந்து கூர் ஶ்ரீ நவசக்தி விநாயகர் ஆலயம், திச்சினோ ஶ்ரீ சிவசுப்பிரமணியசுவாமி கோவில், ஆகியவற்றின் பிரதமகுரு, முத்தமிழ்ச்செல்வன் சிவஶ்ரீ. நாகேஸ்வர. கஜேந்திரக் குருக்கள் உற்சவ குருவாக கிரிகைகளை நடத்தி வைத்தார்கள்.

ஆலய அறங்காவலர் சபை உறுப்பினர்களுடன் இணைந்து, தலைவர் குருபரன்தாஸ் அனைவரையும் அன்போடு நெறிப்படுத்தி வழிநடத்தினார்.

மாலை.05.30 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில், அடியவர்புடைசூழ, விநாயகப் பெருமான் மத்திய தரைக்கடல் பகுதிக்கு எழுந்தருளினார். ஆழ்கடல் நடுவினில், முத்தியளிக்கும் திருவாசகச் சிவபுராணம் பாடி, ஏதுமற்ற ஏதிலிகளாக ஆழ்கடலில் மறைந்து போன அத்தனை ஆத்மாக்களுக்குமான ஆத்மசாந்தி வேண்டிப் பிரார்த்தனை செய்த பின்னர், அன்னத்தில் வடிவமைக்கப்பட்ட விநாயகர் திருவுருவை, ஆழ்கடலில் கரைத்து, மனமுருகப் பிரார்த்தித்து, மறு படியும் கரை திரும்பினார்கள்.

ஜெனோவா துறைமுகப் பகுதியில் அமைந்த சிறப்பு மண்டபத்தில் தங்கிய விநாயகப் பெருமானுக்கு மறுநாள் 08.07.2018 ஞாயிறு ஜெனோவா மக்களின் அனுசரணையில் சங்காபிஷேகமும், பூஜையும் நடைபெற்று ,தமிழ் பாடசாலை மாணவர்களின் கலைநிகழ்வுகளும், இடம்பெற்றன. தமிழர் விளையாட்டுக்கழகத்தினர் தாகசாந்தி செய்து உதவினார்கள்.

நிறைவாக மாலை 6.00 மணிக்கு ஆலயத்திற்கு எழுந்தருளிய விநாயகப் பெருமானுக்கு பிரார்ச்சித்த அபிஷேக பூஜைகள் இடம்பெற்றதுடன், இவ்வாண்டுக்கான அலங்கார உற்சவம், இறையருளால் சிறப்புற நிறைவெய்தியது.

இத்தாலியில் தமிழ் மக்களின் சிறப்பான இவ்விழாவினை, இத்தாலியப் பத்திரிகைகள் பாராட்டிச் செய்தி வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers

loading...