இலங்கையர்கள் அதிகம் வாழும் இத்தாலியிலும் கொரோனோ வைரஸ் தாக்கம் - இதுவரை ஐவர் பலி

Report Print Vethu Vethu in ஐரோப்பா

இத்தாலியில் வேகமாக பரவும் கொரோனா வைரஸ் காரணமாக அங்கு வாழும் இலங்கையர்கள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இதற்கான நடவடிக்கைகளை ரோமில் உள்ள இலங்கை தூதரகம் ஆரம்பித்துள்ளது.

இத்தாலி லொம்பார்ட் பிரதேசத்தில் தாக்கம் செலுத்தும் கொரோனா வைரஸ் காரணமாக அங்கு வாழும் இலங்கையர்கள் தொடர்பில் தீவிர அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இதுவரையில் இத்தாலியில் 104000 இலங்கையர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் நூற்றுக்கு 60 வீதம் அல்லது சுமார் 60000 பேர் லொம்பார்ட் பிரதேசத்திலேயே வாழ்ந்து வருகின்றனர்.

இத்தாலியில் வாழும் எந்தவொரு இலங்கையருக்கும் கொரோனா தொற்றியுள்ளதாக இன்னமும் உறுதி செய்யப்படவில்லை என வெளிவிவகார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

வட இத்தாலியில் சுற்றுலா மேற்கொள்ள எதிர்பார்க்கும் இலங்கையர்கள் அவதானமாக செயற்பட வேண்டும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இத்தாலியில் வாழும் இலங்கையர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதற்காக ரோமில் உள்ள இலங்கை தூதரகம் விசேட தொலைபேசி இலக்கங்களை வெளியிட்டுள்ளது.

அதற்கமைய 0039-06-884-0801 மற்றும் 0039-06-885-4560 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாக இலங்கையர்கள் தூதரகங்களை தொடர்பு கொள்ள முடியும்.

தற்போது வரையில் இத்தாலியில் கொரோனா வைரஸ் காரணமாக 5 பேர் உயிரிழந்த நிலையில் 219 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.